தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொலிரூட் தொழிற்சாலை பகுதிக்கு அருகில் நேற்று (13) மாலை இடம்பெற்றுள்ள கோஷ்டி மோதலில் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கிறேட் வெஸ்டன் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய சிவஞானம் சஜீவன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபருடன் நீண்டநாள் பகை கொண்டிருந்தவர் என சந்தேகிக்கப்படும் ஒருவரால் ஏற்பட்ட குழு மோதலில் இச்சம்பவம் நடந்தேறியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவருக்கும் சந்தேக நபர்களுக்கும் இடையில் காணப்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதலில் காயமடைந்த மற்றைய இளைஞர் 23 வயதுடையவர் என்பதுடன் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அதேநேரத்தில் உயிரிழந்தவரின் சடலம் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் பிரேத பரிசோதணைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ள தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
