ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரான அமித பண்டாரவின் கட்சி உறுப்புரிமையை நீக்கவும், மாவட்ட அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் மற்றும் கேகாலை மாவட்டங்களில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட அமைப்பாளர் அமித பண்டார காவல்துறையினால் நேற்று கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, அவரை கட்சியின் உறுப்புரிமையில் இருந்தும், பதவியில் இருந்தும் நீக்குவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளதாக ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் இன்றைய தினம் கூடவுள்ள கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டு, அதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சுமார் 6 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மற்றும் 3 சொகுசு வாகனங்கள் என்பவற்றுடன் 3 சந்தேகநபர்களையும் றம்புக்கணை பகுதியில் வைத்து கோகாலை காவல்துறையின் குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்று கைது செய்தனர்.
அவர்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரான அமித பண்டாரவும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
