இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, இந்தியாவில் அண்மையில் தெரிவித்த கருத்து தற்போது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றம், செய்தியாளர் சந்திப்புகள், அரசியல் மேடைகள் என பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு, போராட்டங்களும் நடாத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தன்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார்.
இந்தியாவின் ஹரின் என்ன சொன்னார்?
”இலங்கையிலுள்ள விமான நிலையங்களை இந்திய நிறுவனங்கள் பொறுப்பேற்கவுள்ளன. மூன்று விமான நிலையங்களை முகாமைத்துவம் செய்யவுள்ளன. உண்மையில் எமக்கு உதவியாக இருக்கின்றது. எமது எரிபொருள் நிரப்பு தாங்கிகளை இந்திய நிறுவனம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. சூரிய சக்தியிலான மின்சாரத்தை இந்திய நிறுவனம் வழங்குகின்றது.
இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என்பதற்காகவே, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், இந்திய சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு செல்லுமாறு கோரியுள்ளார்.” என இந்தியாவின் மும்பை நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ கூறியிருந்தார்.
அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவின் இந்த கருத்தானது, பாரதூரமான கருத்து என தெரிவித்து இலங்கையில் எதிர்ப்புகள் எழுந்தன.
