ஜனாதிபதி தலைமையில் அனுராதபுர ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

வெள்ளத்தால் சேதமடைந்த அனுராதபுர மாவட்டத்தில் பெரும் போகத்தில் நெற்பயிற்செய்கை மேற்கொள்வதற்கு தயார்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தேசியத் தேவையாகக் கருதி, அனைத்து தொடர்புடைய நிறுவனங்களும் நன்கு ஒருங்கிணைந்த முறையில் அதற்கு தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கவும், தற்காலிக பழுதுபார்ப்புகளை மேற்கொண்டு தேவையான நீர்ப்பாசன நீர் விநியோகத்தை வழங்கவும் சம்பந்தப்பட்ட தரபபினருக்கு அறிவுறுத்தினார்.

பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இலங்கை வரலாற்றில் மிக உயர்ந்த இழப்பீட்டை வழங்குவதன் ஊடாக பயிற்செய்கை நடவடிக்கைகளை விரைவில் மீண்டும் தொடங்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனுராதபுரம் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கும், உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்வதற்காக இன்று (07) காலை அனுராதபுரம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

அனர்த்தத்தால் முழுமையாக சேதத்தை எதிர்கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை, விவசாயக் காணிகளின் அளவு மற்றும் தேவையான நிதி என்பன குறித்த அறிக்கையை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார். இந்த இழப்பீட்டை நியாயமாகக் கிடைக்க வேண்டியவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், அதனை அநீதியான முறையில் யாரும் பெறக்கூடாது என்றும் சுட்டிக்காட்டினார்.

Exit mobile version