2 கோடி ரூபா பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது!

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட, இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ‘குஷ்’ ரக போதைப்பொருளுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து இன்று அதிகாலை 12.35 மணியளவில் தாய்லாந்து எயார்வேஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த 26 வயதுடைய வர்த்தகர் ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனையிட்டனர். இதன்போது, அவரது பயணப் பையின் இரகசியப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 116 கிராம் ‘குஷ்’ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் சந்தைப் பெறுமதி சுமார் 2 கோடியே 11 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த குறித்த நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து, இந்த போதைப்பொருள் தொகுதியைப் பொறுப்பேற்பதற்காக நீர்கொழும்பு பகுதியில் காத்திருந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் கைது செய்யப்பட்ட இருவரும் மன்னார் பகுதியைச் சேர்ந்த 43 மற்றும் 36 வயதுடைய நபர்கள். இவர்களில் ஒருவர் தொழில்நுட்பவியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களையும் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version