ஈரான் கடற்படைக் கப்பலுக்கு அனுமதி: அரசின் தீர்மானத்தை நாமல் ராஜபக்ச வரவேற்பு
ஈரான் கடற்படையின் IRIS Bushier கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து திருகோணமலை துறைமுகத்தில் தரிப்பதற்கு அனுமதி வழங்கிய அரசின் தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வரவேற்றுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம், மனிதாபிமான காரணங்களின் அடிப்படையில் அந்தக் கப்பலில் இருந்த 208 கடற்படை வீரர்களை கொழும்பிற்கு கொண்டு வர அனுமதி வழங்கியிருந்தது.
சமூக ஊடக தளம் X இல் வெளியிட்ட பதிவில் இதனை குறிப்பிட்டுள்ள நாமல் ராஜபக்ச, பிராந்தியத்தில் நிலவி வரும் மோதல் சூழ்நிலையில் இலங்கை தனது நடுநிலை கொள்கையை பேணுவது மிகவும் முக்கியமானது என்பதை இந்த முடிவு வெளிப்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும், சர்வதேச சட்டத்தின் கீழ் இலங்கை மேற்கொள்ள வேண்டிய கடமைகளை மதிப்பதுடன், தேவையான சந்தர்ப்பங்களில் மனிதாபிமான உதவிகளை வழங்குவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்புகளுக்கும் இடையில் உரையாடலை ஊக்குவித்து, வளைகுடா பிராந்தியத்திலும் உலகளாவிய அளவிலும் அமைதி மற்றும் நிலைத்தன்மையை நிலைநிறுத்த இலங்கை அரசாங்கம் தொடர்ந்து முயற்சி செய்யும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும், இந்தியப் பெருங்கடலில் கடல் பாதுகாப்பையும் பாதுகாப்பு ஒத்துழைப்பையும் உறுதி செய்ய இந்தியா உள்ளிட்ட பிராந்திய கூட்டாளிகளுடன் இலங்கை அரசு நெருங்கிய ஒத்துழைப்பை மேற்கொள்ள வேண்டும் என நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
