ஈரானிய போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவு: இணையக் கட்டுப்பாடுகளை தளர்த்தப் போவதாக அறிவிப்பு!

பொலிஸ் காவலில் உயிரிழந்த பெண்ணுக்கு நீதிக் கோரி போராட்டங்களில் ஈடுப்பட்டுவரும் போராட்டக்காரர்களுக்கு உதவப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதன்படி, போராட்டங்கள் மீதான கட்டுப்பாட்டை எதிர்கொள்ள ஈரான் மீதான இணைய கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கன் கூறுகையில், ‘ஈரானிய மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருளில் வைக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த நாங்கள் உதவப் போகிறோம்.

இணையக் கட்டுப்பாடுகளை ஓரளவு தளர்த்துவது ஈரானியர்களின் அடிப்படை உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று கோரும் அர்த்தமுள்ள ஆதரவை வழங்குவதற்கான உறுதியான நடவடிக்கை.

ஈரானிய அரசாங்கம் தனது சொந்த மக்களைப் பற்றி பயப்படுகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது’ என கூறினார்.

மென்பொருள் கட்டுப்பாடுகளை தளர்த்துவது அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் ஈரானில் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த அனுமதிக்கும்.

இந்த நடவடிக்கை ஈரானிய அரசாங்கத்தின் மக்களை கண்காணித்து தணிக்கை செய்யும் முயற்சியை எதிர்கொள்ள உதவும் என்று அமெரிக்க கருவூலம் கூறியது.

ஆனால், இது தொடர்பு ஒடுக்குமுறையின் ஒவ்வொரு கருவியையும் அகற்றாது என்பதால் உடனடி தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை.

கோடீஸ்வரர் எலோன் மஸ்க் தனது டுவிட்டரில், பிளிங்கனின் அறிவிப்புக்கு பதிலளிக்கும் விதமாக ஈரானுக்கு இணைய சேவைகளை வழங்குவதற்காக தனது செயற்கைக்கோள் இணைய நிறுவனமான ஸ்டார்லிங்கை செயற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களின் மிகப்பெரிய நெட்வொர்க் வழியாக இணைய சேவைகளை வழங்குகிறது மற்றும் அதிவேக இணையத்தைப் பெற முடியாத தொலைதூர பகுதிகளில் வசிப்பவர்களை இலக்காகக் கொண்டுள்ளது.

Exit mobile version