கட்டாரில் நடைபெறவுள்ள பிஃபா கால்பந்து உலகக் கிண்ணப் போட்டியில் 26 பேர் கொண்ட போர்த்துக்கல் அணிக்கு நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரெனால்டோ தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மான்செஸ்டர் யுனைடட் அணியைச் சேர்ந்த 37 வயதான ரொனால்டோ இந்தப் பருவத்தில் சோபிக்கத் தவறிவந்தபோதும் தேசிய அணியில் இடம்பெற்றுள்ளார். அவர் முதல் முறை உலகக் கிண்ணத்தை வெல்லும் எதிர்பார்ப்புடனேயே இம்முறையும் களமிறங்கவுள்ளார்.
117 சர்வதேச கோல்களை போட்டிருக்கும் ரொனால்டோவுடன் அட்லெடிகோ மெட்ரிட்டின் ஜோவாவோ பெலிக்ஸ் மற்றும் ஏ.சி மிலானின் ராபாயே லெயாவோ போன்ற இளம் வீரர்களும் கடந்த வியாழக்கிழமை (10) அறிவிக்கப்பட்ட போர்த்துக்கல் குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.
ரொனால்டோவுக்கு இது ஐந்தாவது உலகக் கிண்ணத் தொடராக அமையவுள்ளது.
உலகக் கிண்ணத்தில் எச் குழுவில் இடம்பெற்றிருக்கும் போர்த்துக்கல் அணி வரும் நவம்பர் 24 ஆம் திகதி தனது முதல் போட்டியில் கானாவை எதிர்கொள்ளவிருப்பதோடு தொடர்ந்து நவம்பர் 28இல் உருகுவே மற்றும் டிசம்பர் 02இல் தென் கொரியாவை எதிர்கொள்ளவுள்ளது.
