இராமநாதபுரம் பகுதியில் 04 பேர் கைது
இராமநாதபுரம் மண்டபம் அருகே மனோலி தீவு பகுதியில், இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தின் தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடா வழியாக, இலங்கைக்கு கஞ்சா கடத்தவுள்ளதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, மண்டபத்திலுள்ள இந்திய கடலோர காவல் படையினரின் உதவியுடன் ரோந்து கப்பலில்,ரோந்து நடவடிக்கைகள் ஆரம்பமாகின.
இதன்போது, நடுக்கடலில் வந்த தமிழக மீன்பிடிப் படகை இராணுவத்தினர் சோதித்தனர்.
இச்சோதனையில், எட்டு கோணிப்பைகளில் 300 கிலோ கஞ்சாவும், 500 கிராம் எடையுள்ள கஞ்சா எண்ணெயும் இருந்தமை தெரிய வந்தது. படகில், சுமார் 80-க்கும் மேற்பட்ட பார்சல்களிலிருந்த 300 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும்,இதனுடன் சம்மந்தப்பட்ட நால்வரும் கைதாகினர்.
மேலும் இவர்களிடமிருந்து அரை லீட்டர் போதை வஸ்து எண்ணெய், ஜி.பி.எஸ் கருவிகள் மற்றும் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைப்பற்றப்பட்டுள்ள கஞ்சாவின் சர்வதேச மதிப்பு சுமார் இந்திய ரூபாவில் 03 கோடிக்கும் அதிகமெனக் கூறப்படுகிறது.