மகாராஷ்டிராவில் கடந்த 6ஆம் தேதி புகைபிடித்துக்கொண்டிருந்த இரண்டு பெண்களை முறைத்துப் பார்த்ததாகக் கூறி 28 வயது இளைஞர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாக்பூரில் உள்ள மகாலக்ஷ்மி நகர் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு ஜெயஸ்ரீ பஞ்சாடே என்ற பெண் தனது தோழி சவிதா சய்ரே உடன் இணைந்து ஒரு பான் கடைக்கு வெளியே புகைபிடித்துக் கொண்டிருந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போது கடைக்கு வந்த ரஞ்சித் ரத்தோட் என்ற நபர் அவர்கள் இருவரையும் முறைத்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பெண்கள் ஆத்திரமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஞ்சித் ரத்தோட், ஜெயஸ்ரீ அவரைத் தவறாகப் பேசியதையும், அவரை நோக்கி புகையை வீசுவதையும் வீடியோவாகப் படம்பிடித்ததை அடுத்து, வாக்குவாதம் பெரும் சண்டையாக மாறியுள்ளதாக தெரிகிறது. பின்னர் 30 வயது பெண் ஜெயஸ்ரீ தனது நண்பரான ஆகாஷ் ரவுத் என்பவருக்கு செல்போனில் அழைத்து அங்கு வரும்படி கூறியுள்ளார். தனது நண்பர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்த பிறகு, ஆகாஷ் ரவுத் ரஞ்சித்தை எதிர்நோக்கி வார்த்தைகளால் திட்டிவிட்டு உடனடியாக கத்தியால் குத்தியுள்ளார். ஒருமுறை அல்ல, பலமுறை ரஞ்சித்தை ஆகாஷ் ரவுத் கத்தியால் குத்தியது அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
ஜெயஸ்ரீ தனது நண்பர்களை வரவழைத்ததை அடுத்து கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றதாக கடை உரிமையாளரும், வழக்கின் முக்கிய சாட்சியுமான லக்ஷ்மன் தாவ்டே என்பவர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து உடனடியாக விரைந்து வந்த போலீசார் ரஞ்சித்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரஞ்சித் ரத்தோட் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஜெயஸ்ரீ, சவிதா, ஆகாஷ் ஆகியோரை கைது செய்தனர். அத்தோடு அவர்கள் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.