2022 ரி20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் நெதர்லாந்து அணியை 16 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இலங்கை அணி, 16 அணிகள் விளையாடும் சுப்பர்-12 சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னிலுள்ள ஜீலோங்கில் இன்று முற்பகல் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதற்கமைய, ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய குசல் மெண்டிஸ் 79 (44) ஓட்டங்களையும், சரித் அசலங்க 31 (30) ஓட்டங்களையும், பானுக ராஜபக்ஷ 19 (13) ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
அந்த வகையில் 20 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 162 ஓட்டங்களை பெற்றது.
நெதர்லாந்து அணி சார்பில், பவுன் மீகரன் மற்றும் பெஸ் லீட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பதிலுக்கு 163 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி, 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் வணிந்து ஹசரங்க 3 விக்கெட்டுகளையும், மஹீஷ் தீக்ஷண 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அந்த வகையில், 16 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இலங்கை அணி குழு நிலையின் அடிப்படையில், குழு A யில் 3 போட்டிகளில் விளையாடி, 2 போட்டிகளை வென்று 4 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது.
குழு நிலையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி அடுத்த சுற்றிற்கு தெரிவாகும் என்பதற்கு அமைய, இலங்கை அணி சுப்பர் 12 சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளது.
ஆட்டநாயகனாக குசல் மெண்டிஸ் தெரிவானார்.