விஷாலின் ‘லத்தி’ அப்டேட்

‘புரட்சித் தளபதி’ விஷால் நடிப்பில் தயாராகி வரும் ‘லத்தி’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்படும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் ஏ. வினோத்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘லத்தி’. இதில் விஷால் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘சமர்’ படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக நடிகை சுனைனா நடித்திருக்கிறார்.

இவர்களுடன் பிரபு, முனிஷ்காந்த், ‘தலைவாசல்’ விஜய், மிஷா கோஷல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலசுப்ரமணியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

காவலர் ஒருவரின் தொழிற்சார்ந்த வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராணா புரொடக்சன்ஸ் எனும் நிறுவனம் சார்பில் நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

விரைவில் வெளியீட்டுக்கு தயாராகி வரும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்படும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் டிசம்பர் மாதம் 12ஆம் திகதியன்று மாலை ஆறு மணியளவில் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகிறது. இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

இதனிடையே தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படம், இம்மாதம் 22 ஆம் திகதியன்று பட மாளிகையில் வெளியாக கூடும் என அவதானிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version