நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள சிவன் கோவிலில் உயிருள்ள யானைக்கு பதிலாக ரோபோ யானை வைத்து பூஜைகள் நடத்தப்படுகின்றன. யானைகளை பாதுகாப்பதற்கான முயற்சியாக அறிமுகமாகியுள்ள இந்த ரோபோ யானை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த கோவிலில் ரோபோ யானை அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னணி என்ன? அந்த ரோபோ யானை கோவிலில் என்னவெல்லாம் செய்கிறது? தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தமிழ்நாடு, கேரளாவில் கோவில் யானைகள் துன்புறுத்தல் என்ற குற்றச்சாட்டுக்கு ரோபோ யானை முடிவு கட்டுமா? விரிவாகப் பார்க்கலாம்.
கோவில் வழிபாட்டிற்கு ரோபோ யானை அறிமுகம்
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தேவர் சோலை சிவன் கோவிலில், ரோபோ யானை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அங்கே உயிருள்ள யானைக்குப் பதிலாக இந்த ரோபோ யானையை முன்னிறுத்தியே பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட கனடாவில் வசிக்கும் சங்கீதா என்பவர், 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த ரோபோ யானையை கோவிலுக்கு பரிசாக வழங்கியுள்ளார்.
பார்ப்பதற்கு உயிருள்ள யானை போல் வடிவமைக்கப்பட்டு உள்ள இந்த யானையின் காதுகளும், கண்களும் அசைகின்றன. வால் அசைவதுடன், தும்பிக்கையை மடக்கி நீரையும் இந்த ரோபோ யானை பீய்ச்சி அடிக்கிறது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் வியப்புடன் பார்ப்பதுடன், ரோபோ யானையை தொட்டும் வணங்குகின்றனர். சிறுவர்கள் பயம் கலந்த மகிழ்ச்சியுடன் யானையை தொட்டுப் பார்க்கின்றனர். பலரும் ஆர்வமிகுதியில் ரோபோ யானையுடன் செல்பி எடுத்துக் கொள்கின்றனர்.
கோவிலில் உயிருள்ள யானைகளை வைத்து என்னென்ன பூஜைகள் செய்யப்படுமோ, அவை அனைத்தும் இந்த ரோபோ யானையை வைத்தும் பூஜைகள் நடத்தப்படுகின்றன. இரும்பு மற்றும் பைபர் கொண்டு, 900 கிலோவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரோபோ யானைக்கு, ஹரிஹரன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
‘கடவுள் கணேசா கண்ணீர் விடுகிறார்’
யானை பரிசளித்தது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய ‘வாய்சஸ் ஃபார் ஏஷியன் எலிஃபெண்ட்ஸ்’ அமைப்பின் தலைவரான சங்கீதா, ‘‘இந்தியாவைப் பொருத்தவரையில் இந்துக்களின் கலாசாரத்தில் யானைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நாம் அனைவரும் அன்புடன் கடவுள் கணேசனை வணங்குகிறோம். யானைகளை நாம் கடவுள் கணேசனின் உருவமாகத்தான் பார்க்கிறோம், கோவில்களில் வைத்து பூஜைகள் செய்து வழிபடுகிறோம். ஆனால், ஆன்மிகத்தின் பெயரால் யானைகள் மிகக்கடுமையாக துன்புறுத்தப்படுகின்றன.
அதிக எடையுள்ள சங்கிலி, ஆபரணங்களால் அவற்றால் நகரக் கூட முடிவதில்லை. வெப்பமான தார் ரோட்டில் கோவில் யானை நடக்க வைக்கப்படுகிறது. நாம் நினைப்பதைப் போல நடிக்க வைப்பதால், யானைகள் கடுமையான பாதிப்புகளை சந்திக்கின்றன. இந்த துன்புறுத்தல்களால் கடவுள் கணேசனே கண்ணீர் விடுகிறார்,’’ என்கிறார் அவர்.
மேலும் தொடர்ந்த சங்கீதா, ‘‘இந்த நவீன காலத்திலும் நாம் ஏன் யானைகளை துன்புறுத்த வேண்டும்? என நான் நினைத்த போது தான் உயிருள்ள யானைக்கு பதிலாக ரோபோ யானையை வழங்கலாமே என்று தோன்றியது. யானைகளை காப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கலாசாரம் விட்டுப்போகாமல் வழிபாட்டை பின்பற்றவும், தேவர்சோலை சிவன் கோவிலுக்கு ரோபோ யானை பரிசளித்தேன்,’’ என்றார்.
சங்கீதா, கோவிலுக்கு ரோபோ யானையை வழங்கியவர்
‘கேரளாவில் ஆண்டுக்கு 25 கோவில் யானைகள் பலி’
இந்தியாவிலேயே கேரளாவில் தான் அதிக கோவில் யானைகள் மரணிப்பதாகவும், அதிக துன்புறுத்தல்கள் நடப்பதாகவும் வருத்தம் தெரிவிக்கிறார் சங்கீதா.
இது குறித்து பேசிய சங்கீதா, ‘‘உலகில் மொத்தமாக 40 ஆயிரம் ஆசிய யானைகள் தான் உள்ளன. இதில், 25 ஆயிரம் யானைகள் இந்தியாவில் உள்ளன. இதில், 2,500 யானைகள் காட்டிலிருந்து பிடிக்கப்பட்டு வளர்ப்பு யானைகளாக, கோவில் யானைகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையில் 500க்கும் மேற்பட்ட யானைகள் கேரளாவில் மட்டுமே உள்ளன.
யானைகளுக்கு எதிரான துன்புறுத்தல் நடப்பதில் கேரளாவைப் போன்ற ஒரு குரூரமான மாநிலம் இந்தியாவிலேயே இல்லை. அங்கு தான் கோவில், திருவிழாக்களில் யானைகள் கடுமையாக துன்புறுத்தப்படுகின்றன. இந்த காரணத்தால் கேரளாவில் மட்டுமே ஆண்டுக்கு சராசரியாக, 25 கோவில் யானைகள் பரிதாபமாக மரணிக்கின்றன.
‘‘கலாசாரம் என்ற பெயரில் யானைகள் துன்புறுத்தப்படுவதற்கு எதிராக குரல் கொடுக்கவும், நவீன தொழில்நுட்பம் வாயிலாக நம் வழிபாட்டு முறை பாதிக்கப்படாமல் தீர்வு காணவும் தான் ரோபோ யானை திட்டம் உருவாக்கியுள்ளேன். கோவில்களில் உயிருள்ள யானைக்கு பதிலாக இது போன்று ரோபோக்கள் பயன்படுத்த அனைவரும் முன்வர வேண்டும்,’’ என்கிறார் சங்கீதா.
‘காட்டின் உயிர் ஆதாரமான யானைகளை காக்க வேண்டும்’
கோவில்களில் யானைகள் பயன்படுத்துவது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய, காட்டுயிர் ஆர்வலர் கோவை சதாசிவம், ‘‘கேரளாவை பொருத்தவரையில் வீட்டில் யானையை வளர்ப்பதை பெருமையாக கருதுகின்றனர். அதிகப்படியான கோவில்களில் யானைகள் வளர்க்கப்படுகின்றன. தமிழகத்தில் அந்த அளவுக்கு யானைகள் இல்லை என்றாலும், சமீபத்தில் கோவில்களில் இனி புதிதாக வளர்ப்பு யானைகள் வாங்கக்கூடாது என சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், கேரளாவில் இதுபோன்ற உத்தரவு இல்லை, அதற்கு பதிலாக அவர்கள் வளர்ப்பு யானைக்கான தனிச்சட்டம் உருவாக்கி, யானை வளர்ப்புக்கு பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.
எனினும் கோவில்களில் யானைகளுக்கு மனிதர்கள் சாப்பிடுவதைப் போல உணவு வழங்குவதால், யானைகள் நீரிழிவு நோய் ஏற்பட்டும், மாரடைப்பாலும் மரணிப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. யானையை பிடித்து வளர்த்து அதற்கு நாம் உண்ணும் உணவை கொடுப்பது என்பது இயற்கைக்கு முற்றிலும் எதிரானது,’’ என்றார்.
‘கோவில்களில் யானைகள் பயன்பாட்டை தடை செய்யணும்’
மேலும் தொடர்ந்த சதாசிவம், ‘‘சாதாரணமாகவே ஆசிய யானைகள் தொடர்ந்து அழிந்து வருகின்றன. அதிலும் கோவில்களில் பல யானைகள் துன்புறுத்தலுக்கு உள்ளாகி மரணிக்கின்றன. யானைகள் காட்டின் உயிர் ஆதாரமாக உள்ளதால், அதைப் பிடித்து கும்கிகளாகவும், கோவில் யானைகளாகவும் மாற்றி அதை அடிமைப்படுத்துவதை கைவிட வேண்டும்.
நாடு முழுவதிலும் கோவில்களில் யானைகளை பயன்படுத்துவதை தடை செய்வதுடன், கும்கிகளாக மாற்றுவதை குறைக்க வேண்டும். யானை இல்லாமல் வழிபாட்டு கலாசாரம் மாறிவிடும், வழிபாடு பாதிக்கும் என நினைப்போர், ரோபோ யானையை பயன்படுத்த முன்வர வேண்டும்,’’ என்றார் விரிவாக.
கேரள அரசு சொல்வது என்ன?
கேரளாவில் அதிக அளவு கோவில் யானைகள் துன்புறுத்தப்படுவதாக சங்கீதா முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் குறித்து, பிபிசி தமிழ் கேரள வனத்துறையின் முதன்மை தலைமை வன பாதுகாவலர் ஜெயபிரசாத்திடம் விளக்கம் கேட்டது.
பிபிசி தமிழிடம் பேசிய ஜெயபிரசாத், ‘‘கேரளாவில் 2012ம் ஆண்டு காட்டிலிருந்து பிடிக்கப்பட்ட வளர்ப்பு யானைகளை பராமரிப்பது தொடர்பாக தனியான சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதில், யானைக்கான உணவு, இருப்பிடத்தின் அளவு, பராமரிக்கும் முறை என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கோவில்களை பொறுத்தவரையில் யானைகளின் முழு கட்டுப்பாடு அறநிலையத்துறை வசம் தான் உள்ளது. இந்த யானைகளை கண்காணிப்பது, யானை மீது தாக்குதல் நடத்தும் பாகன்கள், பராமரிக்காமல் விடுவோர் மீது அபராதம் விதிப்பது மட்டுமே வனத்துறையின் பணியாக உள்ளது. மற்றபடி வளர்ப்பு யானைகள் தொடர்பாக எங்களுக்கு பெரிய அளவில் அதிகாரங்கள் இல்லை.
இந்த பிரச்னையை சரிசெய்வதற்காக, 2012 கேரள வளர்ப்பு யானைகள் பராமரிப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்து, வனத்துறைக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது தொடர்பாக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. வளர்ப்பு யானைகளை பாதுகாப்பதற்காக, இன்னும் 1 மாதத்தில் இந்த சட்டம் திருத்தி அமைக்கப்படும்,’’ என்றார் விரிவாக.
‘கேரள கோவில்களில் துன்புறுத்தலால் ஆண்டுக்கு 25 யானைகளுக்கு மேல் மரணிக்கிறதா?’ என்ற கேள்வியை, முதன்மை தலைமை வன பாதுகாவலர் ஜெயபிரசாத்திடம் முன்வைத்தோம்.
அதற்கு விளக்கமளித்த ஜெயபிரசாத், ‘‘என் கையில் தற்போது அது தொடர்பான புள்ளிவிவரம் இல்லாததால், என்னால் இந்த கேள்விக்கு பதிலளிக்க முடியாது. இருப்பினும் யானைகள் மரணிப்பது மற்றும் அவை துன்புறுத்தலுக்கு உள்ளாவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்,’’ என்றார்.
BBC
Discussion about this post