அஸ்வெசும நலத்திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023 ஆண்டுகளில்) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் பயன் பெறாதவர்களின் தகவல்களை புதுப்பிக்கும் பணிகள் தற்போது நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
நலன்புரி நன்மைகளைப் பெறும் நபர்களின் பெயர் பட்டியல் வருடாந்தம் புதுப்பிக்கப்படுவது கட்டாயமானதால் இந்த தகவல் புதுப்பிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த செயல்முறையின் கீழ் தகுதியுடைய 2,993,558 பேர் ஏற்கனவே தங்களின் தகவல்களை சமர்ப்பித்துள்ளனர். அவர்களால் வழங்கப்பட்ட தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்காக பொறுப்பான கணக்கெடுப்பு அதிகாரிகள் பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று அவர்கள் வழங்கிய தகவல்களை சரிபார்த்து உறுதிப்படுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்பு பணிகள் மார்ச் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தயாராக வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள்
கணக்கெடுப்பு நடைபெறும் போது பின்வரும் ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது:
- குடும்பத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரின் தேசிய அடையாள அட்டைகள்
- கடந்த 3 மாதங்களுக்கான மின்சார கட்டண ரசீதுகள்
- காணி உரிமை ஆவணங்கள்
- வாகன உரிமைப் பத்திரங்கள் (இருப்பின்)
- மருத்துவச் சான்றிதழ்கள் (இருப்பின்)
மேலும், முதியோர் கொடுப்பனவு, ஊனமுற்றோர் கொடுப்பனவு மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கான உதவித் தொகை கோரி விண்ணப்பித்தவர்களின் தகவல்களும் இந்த கணக்கெடுப்பில் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறான தகவல்களுக்கு தண்டனை
இந்த செயல்முறையில் தவறான தகவல்களை வழங்குவது சட்டப்படி குற்றமாகும். தவறான தகவல்கள் வழங்கப்பட்டதாக உறுதியாகின், நீதவான் முன்னிலையில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டவர்களுக்கு 5,000 ரூபாய்க்கு அதிகப்படாத அபராதம், அல்லது ஒரு ஆண்டு வரை சிறைத்தண்டனை, அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.





Discussion about this post