தென் கொரிய தலைநகர் சியோலில் நேற்றிரவு (29) இடம்பெற்ற ‘Halloween’ (ஹலோவீன்) எனப்படும் நிகழ்வில் பங்கேற்ற பாரிய அளவிலான கூட்டத்தில், ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 151 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒரு ஒடுக்கமான பாதையொன்றில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிகளவாள மக்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு யிரிழந்தவர்களில் 19 பேர் வெளிநாட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவர் இலங்கையைச் சேர்ந்த ஒருவரும் உள்ளடங்குவதாக, இலங்கை வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளார்.
27 வயதான குறித்த நபர் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சீனா, நோர்வே, ஈரான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட மேலும் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் அதில் உள்ளடங்குவதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென்கொரியாவில் கொவிட்-19 கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட பின்னர் அந்நாட்டின் தலைநகர் சியோலில் இடம்பெற்ற முதல் நிகழ்வாக இது அமைந்திருந்ததனால், இதில் அதிகளவானோர் பங்குபற்றியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தில் சுமார் 82 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களில் ஒரு சிலரின் நிலை கவலைக்கிடமானதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டம் நேரம் அதிகரிக்க அதிகரிக்க கட்டுக்கடங்காமல் போனதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக ஏற்பட்ட நெருக்கத்தில் கீழே வீழ்ந்த பலர் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர். அந்நாட்டு நேரப்படி இரவு 10.20 மணியளவில் இந்நிகழ்வு உச்சத்தை தொட்ட நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தோரில் பலர் அங்கிருந்த இரவு நேர மதுபான விற்பனை கேளிக்கை கூடத்திற்கு அருகே இருந்தவர்கள் எனவும், அவர்களில் பெரும்பாலானோர் பதின்ம வயதினரும் இளைஞர்களும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபலம் ஒருவர் குறித்த மதுபான விற்பனை கேளிக்கை கூடத்திற்கு வந்ததைத் தொடர்ந்து கூட்டம் சூழ்ந்து கொண்டதால் இச்சம்பவம் ஏற்பட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மரணித்தவர்களை நினைவுகூரும் வகையில் இறந்தவர்களின் ஆன்மாக்கள் மீண்டும் திரும்பும் என்று நம்பப்படும் இந்நாளில், அந்த ஆவிகளைத் தடுக்க நெருப்பு மூட்டும் நிகழ்வாக ஹலோவீன் நிகழ்வு முன்னெடுக்கப்படுகின்றது. இங்கு வேடிக்கையாக மக்கள் பல்வேறு பயங்கரமான பயமூட்டும் ஆடைகளை அணிந்து வெவ்வேறு வகையில் இந்நிகழ்வை கொண்டாடுவது வழக்கமாகும்.
