டிஜிட்டல் மீடியாவில் எழுத்தாளர் சரித்ராவை பற்றிய பெரிய அறிமுகமெல்லாம் தேவை இல்லை. வலைப்பூ, Amazon, முகநூல், Youtube, ப்ரதிலிபி, என கிட்டத்தட்ட எல்லா படைப்பு தளங்களிலும் இயங்கிக்கொண்டிருப்பவர். இலக்கியத்தமிழ் போல் அல்லாது கொச்சைத்தமிழ் போலும் அல்லாது வெகுஜனத்தமிழ் மொழியில் எழுதி வித்தியாசமான எழுத்து பாணியால் தனக்கென்று கணிசமான வாசக வாசகியர் கொண்டிருப்பவர். எழுத பலரால் முடியும் .ஆனால் பல எழுத்தாளர்களை உருவாக்க ஒரு சிலரால் மட்டுமே முடியும். இவரது எழுத்துக்கள் பலரது வாழக்கையில் ஒளஷதம் என கூறினாலும் மிகையாகாது . ஏனைய எழுத்தாளர்களுக்கும் இவருக்கும் உள்ள சிறு வித்தியாசம் – ஏனையோர் எல்லாரும் வாசிக்கப்படுகின்றனர். இவர் நேசிக்கப்படுகிறார். காரணம் அறிவோம் வாருங்கள்.
01. யார் இந்த சரித்ரா??
உண்மையை சொல்ல வேண்டுமெனில் நான் யார்? என்பதைத்தான் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன். மற்றபடி அடையாளத்தால் எனது பெயர் சரித்ரா alias அரவிந்த். பிறப்பால் எனது பூர்விகம் தமிழ்நாடு. படிப்பால் எனது தகுதி கட்டிடக்கலை (Architecture). இருப்பால் நானிருப்பது கத்தார் (கூடவே சில இதயங்களில்). மரணத்தால் “பிணம்” என்ற அடையாளம் ஆவதற்குள், எழுத்தால் என்னையே ஏதேனும் உணர முடியுமாவென முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்.
02. எந்தெந்த தளங்களில் எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள்? உங்கள் படைப்புகள் பற்றி?
வலைப்பூ, Amazon, முகநூல், Youtube, ப்ரதிலிபி என எல்லா தளங்களிலும் எழுதிக்கொண்டிருக்கிறேன். குறுநாவல், கவிதைத்தொகுப்பு உள்பட ஆறு புத்தகங்கள் அமேசானில் வெளிவந்திருக்கிறது. அவற்றிலொன்றை பெருமதிப்புக்குரிய இயக்குனர்/நடிகர் பார்த்திபன் அவர்கள் ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார். ஆங்கில அச்சுப்புத்தகம் ஒன்றும் வெளிவந்திருக்கிறது.
01.வாசுவின் தேவதைகள் (அனுபவத்தொகுப்பு)
02.அடுத்தவன் மனைவி (குறுநாவல்)
03. பாரத் சைக்கிள் கடை (மெட்றாஸ் பாஷையில் மஹாபாரதம்)
04. காமப்புத்தகம் (கவிதைத்தொகுப்பு)
05. ஹிம்ஸாகரின் கோயம்புத்தூர்க்காரி (அனுபவக்கதை)
06. முலை (பெண்ணியக் கட்டுரைகள்)
07. BAD Story.
இதுதவிர முகநூலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதை/கதை/கட்டுரை தொகுப்புகள் எழுதியிருப்பதால் ஓரளவு பிரசித்தம் அதிகம்.
03. டிஜிட்டல் எழுத்தாளராய் இருப்பது பற்றி?
டிஜிட்டலில் எழுதுவதில் ஒரு சௌகரியம் இருக்கிறது. எல்லாக் கனவுகளையும், கற்பனைகளையும் எழுத்தோடு சேர்த்து வரைகலையிலும் வாசகர்களுக்கு கடத்தி விடலாம். தவிர டிஜிட்டல் எழுத்தாளர் என்பதால் உலகெங்கும் உள்ள தமிழ் வாசிப்பாளர்களை ஒரே சமயத்தில் சென்றடைய முடிகிறது. நினைத்த நேரத்தில் தொடர்பு கொள்ளவோ, எழுதவோ முடிகிறது. இருப்பினும் “Old is Gold” என்பதற்கொப்ப பேப்பர் தாள் புத்தகத்தின் வாசமும் உணர்வும் என்றுமே அலாதிதான். அதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறேன் தற்போது. விரைவில் எதிர்பார்க்கலாம்.
04. விமர்சனங்கள், வாசகர்கள் பற்றி ?
எதிர்மறையோ நேர்மறையோ, விமர்சனங்கள் என்பது ஒரு கலைஞனுக்கு நிச்சயம் தேவை தான். ஆனால் எதை எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. என்னெழுத்தை பூஜையறையில் வைத்து பூஜிக்கவும் செய்கிறார்கள், எனக்காக புத்தகம் எழுதி அர்ப்பணிக்கவும் செய்கிறார்கள். அதே சமயம், “இவரெழுத்து புரியவில்லை, வரைகலை பிடிக்கவில்லை” என்று ஒதுக்கவும் செய்கிறார்கள். போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் எழுத்தினிற்கே என்பதால் இரண்டையும் ஒன்றாகவே ஏற்கிறேன். வாசகர்கள், ஏற்கனவே சொன்னதுதான். டிஜிட்டல் எழுத்தாளர் என்பதால் உலகெங்கும் உள்ள பலதரப்பட்ட தமிழ் வாசக வாசகிகளை ஒரே சமயத்தில் சென்றடைய முடிகிறது. குறிப்பாய் இலங்கை வாசக நெஞ்சங்கள். ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா என எங்கெல்லாம் தமிழ் விரவிக்கிடக்கிறதோ அங்கெல்லாம் அடிப்படையாய் ஒரு இலங்கைத் தமிழரேனும் இருப்பார். தவிர அவர்களது தமிழ் வாசிப்பில் இருக்கும் அழுத்தம், அடர்த்தி ரொம்பவே அதிகம்.
05. இலங்கை-தமிழ்நாடு உறவுநிலை பற்றி?
இலங்கை, “இந்து சமுத்திரத்தின் முத்து”. புன்னகைக்கும் மக்களின் தேசம் அது. ஒரு இந்தியனாக, தமிழனாக, பொதுமனிதனாக பார்த்தால் நமக்குள் ஒரு சகோதரத்துவம் மேலோங்கியே நிற்கிறது. மற்றபடி அரசியல், விளையாட்டு மாறுபாடுகளை தவிர்த்துவிட்டு இலக்கியம், கலை, எழுத்து என்று பார்த்தால் இலங்கைக்கும் தமிழகத்திற்கும் உள்ள பிணைப்பு அற்புதமான ஒன்று. இருதரப்பு எழுத்தாளர்களும் இருதரப்பு வாசிப்பாளர்களையும் கவர்ந்திருப்பதுவே அதற்கு உதாரணம். தவிர இலங்கைத்தமிழை, தமிழர் வாழ்வை கதைக்களமாக கொண்ட எத்தனையோ ஆகச்சிறந்த தமிழ் திரைப்படைப்புகள் (கன்னத்தில் முத்தமிட்டால், குப்பி, நந்தா..) இங்கே வெளிவந்திருக்கிறது.
06. எதிர்கால திட்டங்கள்?
நான்
வாழ்வதற்காக
எழுதவுமில்லை-
எழுதுவதற்காக
வாழவுமில்லை-
Just…
வாழ்வதை
எழுதிக்கொண்டிருக்கிறேன்.!
ஒரு கதைத்தொகுப்பு புத்தகமாக வெளிவர இருக்கிறது. ஒரு குறும்படத்துக்காக கதை கேட்டிருக்கிறார்கள். திரைப்படங்களில் பணியாற்ற வாய்ப்புகள் வந்தாலும் உத்தியோகம் காரணமாக கத்தாரில் இருப்பதால் நடைமுறைச் சாத்தியங்கள் காரணமாய் தற்போதைக்கு தள்ளி வைத்துக்கொண்டிருக்கிறேன். இவையெல்லாம் எதிர்கால திட்டம் என்பதை விடவும், எழுத்தால் என்னையே தேடிக்கொண்டிருக்கும் சீரிய முயற்சியில் இறங்கியிருக்கிறேன் என்பது முக்கியமான திட்டம். வாழ்வில் “முழுமை” என்பதை எட்டிப்பார்க்கும் எண்ணத்தின் விளைவு அது. அது கைகூடும் என்ற நம்பிக்கை வரக்காரணம், வாசிப்போர்களே நிறைய பேர் “உம்மெழுத்தால் நாங்கள் மாறிக்கொண்டிருக்கிறோம்” என்று உரைப்பது. அவர்களுக்கு என் பெரும் நன்றிகள்.
புத்தகம் பற்றிய தேடுதலுக்கு, வாட்சப்பில் தொடர்பு கொள்ளலாம். +974-30445041.
