போதைப் பொருள் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 7 வெளிநாட்டவர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று 10 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இவ்வாறு நீதிமன்ற தீர்ப்புக்கு உள்ளானவர்களில் 5 பாகிஸ்தான் பிரஜைகளும் 2 ஈரான் பிரஜைகளும் உள்ளடங்குவதாக பொலிஸ் தலைமையக ஊடகப் பிரிவு தெரிவித்தது.
கடந்த வருடங்களில் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பணியகம் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களின் போது மேற்படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்களுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் பத்தாம் திகதி கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 45 கிலோவிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் மேற்படி ஐந்து பாகிஸ்தான் பிரஜைகளும் இரண்டு ஈரான் பிரஜைகளும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் 7 பேருக்குமே நேற்று கொழும்பு மேல் நீதிமன்றம் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட நைஜீரியப் பிரஜைக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
