வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய ஆகிய மாகாணங்களில்
பெருந்தொகையான பஸ்கள் அனுமதிப் பத்திரங்களின்றி போக் குவரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இவ்வாறான குற்றங்களுக்கு விதிக்கப்படும் 10,000 ரூபா தண்டப் பணத்தை 5 இலட்சம் ரூபா வரையில் அதிகரித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தை திருத்துவதற்கு யோசனை முன்வைத்து சட்டமா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அராசாங்கத் தகவல் திணைக்களத்தில் (11) ம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
மன்னம்பிட்டிய பஸ் விபத்து தொடர்பில் எங்களின் கவலையை தெரிவித்துக்கொள்கிறோம். சாரதியின் கவனயீனம் காரணமாகவே இந்த உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அறிக்கை கமைய, இந்த பஸ் தேசிய போக்கவரத்து ஆணைக்குழுவில் அனுமதிப் பத்திரத்தை பெற்றிருக்க வில்லை என்பதும் கிழக்கு மாகாண சபையினால் 2008 ஆம் ஆண்டு அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது.
இந்த அனுமதிப் பத்திரத்தின் உரிமையாளர் இதற்கு முன்னர் 2009 ஆம் ஆண்டு 10,000 ரூபா தண்டப் பணத்தையும் செலுத்தியுள்ளார் அதன்பின்னரே தற்போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதுபோன்ற விபத்துச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகம் பதிவாகுவதால், இவ்வாறான குற்றங்களுக்கு விதிக்கப்படும் 10,000 ரூபா தண்டப் பணத்தை 5 இலட்சம் ரூபாவரையில் அதிகரித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தை திருத்துதல் உள்ளிட்ட மேலும் சில திருத்தங்களை மேற்கொள்ளுமாறு யோசனைகளை முன்வைத்து சட்டமா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளேன்.
முச்சக்கரவண்டி, பாடசாலை வேன், அலுவலக வாகனங்கள் தொடர்பான ஒழுங்குவிதிகளை மேற்கொள்வதற்கான அதிகாரத்தையும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் சட்டமா அதிபருக்கு யோசனை முன்வைத்துள்ளேன்.
