தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் (NMRA) பணிப்பாளர் சபை, நிபுணர்களின் ஆலோசகர் குழுவின் பரிந்துரைகளை புறக்கணித்து, சுகாதார அமைச்சினால் கோரப்பட்ட மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது என சிரேஷ்ட வைத்திய ஆலோசகர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம குற்றஞ்சாட்டியுள்ளார்.
உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சில மருந்து வகைகளை கொள்வனவு செய்வதற்கு விசேட ஆலோசகர் குழு சில சந்தர்ப்பங்களில் அனுமதி மறுத்துள்ளது.
எவ்வாறாயினும், தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் பணிப்பாளர் சபை குழுவின் பரிந்துரைகளை மீறி, சில பதிவு செய்யப்படாத மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு அனுமதி அளித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“விசேட ஆலோசகர் குழுவால் அங்கீகரிக்கப்படாத மருந்துகளை தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் பணிப்பாளர் சபை கொள்வனவு செய்வதுதான் பிரச்சினை” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் வினவியபோது, தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம் சில மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு சுகாதார அமைச்சின் அங்கீகாரம் பெற்றிருந்தால், அவற்றைக் கொள்வனவு செய்வதற்கு தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் பணிப்பாளர் சபை கட்டுப்பட்டிருப்பதாகத் தெரிவித்ததாகவும் வைத்தியர் விஜேவிக்ரம மேலும் தெரிவித்தார்.
மேற்படி மருந்துகளை உட்கொண்டதன் விளைவாக பல நபர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுவதைத் தொடர்ந்து தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்வது வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
அண்மைக் காலங்களில் இலங்கையில் அரச வைத்தியசாலைகளில் பல மரணங்கள் பதிவாகியதை அடுத்து, குறித்த மருந்துகளை சுகாதார அமைச்சு இடைநிறுத்தியுள்ளது.
