13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கட்சிகளின் யோசனைகளை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களிடம் கோரியிருந்தார்.
இதன் பிரகாரம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு எழுத்து மூலம் கடந்த (08) கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கையெழுத்திட்ட கடிதம் நேற்று அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.
13ஆவது திருத்தம், இனப்பிரச்சினைத் தீர்வின் தொடக்கப் புள்ளியாகவோ இறுதித் தீர்வாகவோ ஏற்றுக்கொள்ள முடியாது. 1987ஆம் ஆண்டிலேயே தமிழ்த் தரப்புக்களால் 13ஆவது திருத்தம் நிராகரிக்கப்பட்டதாகவும் அக்கடித த்தில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வடக்கு, கிழக்கு இணைந்த தமிழ்த் தேசம். இறைமை, சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த சமஷ்டி அரசியல் யாப்பின் மூலம் மட்டுமே,இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.
75 வருடங்களாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண இதுவே வழி என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம்,1987 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டபோது அதனைத் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தொடக்கப்புள்ளியாகக் கூட ஏற்றுக் கொள்ள முடியாதெனக் குறிப்பிடப்பட்டது.
இதனைச் சட்டமாக நிறைவேற்ற அனுமதிக்க வேண்டாமென்றும், இதைத் தடுத்து நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட் டது.
அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் மு.சிவசிதம்பரம், செயலாளர் அமிர்தலிங்கம் சிரேஸ்ட உபதலைவர் இரா சம்பந்தன் ஆகியோர் ஒப்பமிட்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு அனுப்பிய கடிதமும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து தயாரித்த தமிழ் தேசம் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஷ்டித்தீர்வு யோசனை வரைபையும் இணைத்து நேற்று முன்தினம் (09) கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்பியால் கடிதம் கையளிக்கப்பட்டது.
