பெருந்தோட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பலவற்றுக்கு நவம்பர் இரண்டாம் திகதிக்கு முன்னர் தீர்வை பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாகவும், இதன் ஒரு கட்டமே ‘ஜீவன சக்தி காப்பீட்டுத் திட்டம்’ எனவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
பெருந்தோட்டத்துறையைச் சேர்ந்தவர்களுக்கான ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் ‘ SLIC ஜீவன சக்தி’ காப்பீட்டுத் திட்ட அறிமுகவிழா (04) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இந்திய வம்சாவளி மலையக மக்களின் 200 ஆண்டுகால வரலாற்றை அடையாளப்படுத்தி, பெருந்தோட்டத் தொழிலாளர்களை தேசிய நீரோட்டத்துக்குள் இணைக்க பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். இத்தகைய முயற்சியின் மற்றுமொரு அங்கமே இந்த ‘ஜீவன சக்தி’ காப்பீட்டுத் திட்டமாகும். இது மக்களுக்கான மிகச்சிறந்த பாதுகாப்பு திட்டம்.
பெருந்தோட்ட நிறுவனங்கள், சிறுதோட்டங்கள் மற்றும் அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் ஆகியவற்றின் கீழ், வேலை செய்யும் சகல தோட்ட தொழிலாளர்களுக்கும், பெருந் தோட்டத் துறை பணியாளர்களுக்கும் இந்த காப்பீட்டுத் திட்டம் உரித்தாகவுள்ளது.
மின் இணைப்பு பற்றிய அனுபவமோ, தொழில்திறனோ இன்றி மின்சார வேலைகளில் ஈடுபட்ட மூவர், ஒரே மாதத்தில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இன்று அவர்களின் மனைவி, பிள்ளைகள் நிர்க்கதியாகியுள்ளனர். இத்தகைய திடீர் இழப்புக்களுக்குள்ளாவோருக்கு இக்காப்பீட்டுத் திட்டம் பெரிதும் கைகொடுக்கும்.
தோட்ட தொழிலாளியொருவர் தோட்டத்தில் வேலை செய்தால் மட்டுமே உரிமைகளை பெற்றவராகின்றார்.
பெருந்தோட்ட மக்களின் சகல பிரச்சினைகளுக்கும் காணி உரிமையின்மையே அடிப்படை காரணமாக அமைகின்றது. பலதரப்பட்ட முயற்சிகளின் விளைவாக தற்போது பெருந்தோட்ட மக்களுக்கு 10 பேர்ச் காணி வழங்கப்படவுள்ளது. இதுதொடர்பான கலந்துரையாடலொன்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ,பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண, ஆகியோருக்கிடையில் இவ்வாரம் நடைபெறவுள்ளது. அடுத்தப்படியாக லயன் வீடுகளுக்கோ, இந்திய வீடமைப்பு திட்டத்தினால் கட்டப்பட்ட வீடுகளுக்கோ இதுவரை விலாசம் இடப்படவில்லை.
இதனால் தபால் சேவைகளைக்கூட உரிய நேரத்தில் பெற்றுக் கொள்ள முடியாமல் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை அனுபவிக்கின்றனர். எனவே, பெருந்தோட்ட துறையிலுள்ள வீடுகளுக்கு தனித் தனியாக இலக்கமிட்டு விலாசத்தை வழங்க தீர்மானித்துள்ளோம்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையக மக்களிடமிருந்து அறவிடும் சந்தா பணத்துக்கான கணக்கறிக்கையை, பாராளுமன்றத்தில் சமர்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
