நாட்டில் இவ்வருடம் ஆயிரம் வைத்தியர்கள் இராஜினாமா

நாட்டில் இந்த ஆண்டில் மட்டும் சுமார்ஆயிரம் வைத்தியர்கள் இராஜினாமா செய்துள்ளதாக பொதுக் கணக்குக் குழு கூடியபோது தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ஜி.விஜேசூரிய தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக கோபா குழு கூடியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

05 வருட விடுமுறையில் வெளிநாடு செல்வது, சேவையில் இருந்து இராஜினாமா செய்தல், முன்னறிவிப்பின்றி இராஜினாமா செய்தல் மற்றும் குறிப்பிட்ட சேவைக் காலம் முடிந்து ஓய்வு பெறுதல் போன்ற காரணங்களால் இந்த வருடம் 957 வைத்தியர்களை சுகாதார அமைச்சு இழந்துள்ளது.

இந்த நிலையில் சில சிகிச்சை பிரிவுகளில் 24 மணி நேர சேவைகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றார்.

வைத்தியர்களின் சேவைக்கு உரிய பெறுமதி இன்மையே வைத்தியர்கள் வெளிநாடு செல்வதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அளுத்கே தெரிவித்தார்.

இதேவேளை பெருமளவிலான தாதியர்களும் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பயிற்சி தாதி திருமதி புஷ்பா ரம்யானி டி சில்வா தெரிவித்தார்.

இந்நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு மற்றும் மருந்துகளை கொள்வனவு செய்வது தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக இரண்டு உப குழுக்களை நியமிப்பதற்கு குழுவின் தலைவர் லசந்த அழகியவண்ண நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு மற்றும் மருந்துகளை கொள்வனவு செய்வது தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள முதலாவது உப குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் இந்த உப குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான, டயானா கமகே, அசோக் அபேசிங்க, ஜயந்த கெட்டகொட மற்றும் ஹரினி அமரசூரிய ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் பிரதீப் உதுகொட தலைமையில் இரண்டாவது உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதன் ஏனைய உறுப்பினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான இசுரு தொடங்கொட, விமலவீர திஸாநாயக்க, மஞ்சுள திஸாநாயக்க, வீரசுமன வீரசிங்க மற்றும் முதிதா பிரஷாந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் மனிதவள முகாமைத்துவம், சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வைத்தியசாலைகள், நிறுவனங்களின் முகாமைத்துவம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அமைப்புகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்களை இந்த உப குழு ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த இரண்டு உபகுழுக்களும் எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி கோபா குழுவிற்கு அழைக்கப்பட்டு அந்த குழுக்களின் விசாரணைகள் மற்றும் பரிந்துரைகளை ஆராய்ந்து எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என கோபா குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

Exit mobile version