மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கம் முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதிகோரி நீதிமன்ற பணிப் புறக்கணிப்புடன் நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு முன்னால் கண்டன ஆர்பாட்டத்தில் இன்று (3) ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி பி.பிரேமநாத் பணிப்புறக்கணிப்பும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்ததையடுத்து, இன்று காலை 10 மணிக்கு மட்டு. நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு முன்னால் சட்டத்தரணிகள் ஒன்றினைந்தனர்.
இதில் நீதிதுறை சுதந்திரத்துக்காய் குரல் கொடுப்போம், சட்டத்தின் முன் யாவரும் சமம், நீதித்துறையை அச்சுறுத்தாதே, பாரபட்சமற்ற விசாரணை வேண்டும், சுதந்திரத்தில் தலையிடாதே போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு முன்னால் சுமார் ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை மாவட்டத்திலுள்ள வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றம், ஏறாவூர் சுற்றுவா நீதிமன்றம், களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றம், மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் உள்ள உயர்நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் நீதவான் நீதிமன்றம், தொழிலாளர் நியாயசபை நீதிமன்றம் உட்பட 8 நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பால் அனைத்து நீதிமன்ற செயற்பாடுகளும் இன்று ஸ்தம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
