பஞ்சு மிட்டாயில் உள்ள நச்சுப் பொருள், நீங்கள் விரும்பி சாப்பிடும் வேறு எந்தெந்த பண்டங்களில் இருக்கிறது தெரியுமா?

சமீபத்தில் சிறார்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் பஞ்சு மிட்டாயில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ரோடமைன் பி எனும் நச்சுப் பொருள் கலந்திருப்பது உணவு பாதுகாப்புத் துறை நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது.

அதனால் 90ஸ் கிட்ஸ்களின் பிடித்தமான இனிப்பு வகைகளின் ஒன்றான இளஞ்சிவப்பு நிறத்தில் விற்கப்படும் பஞ்சு மிட்டாய் தற்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் விற்கப்படும் பஞ்சு மிட்டாய்களை சோதித்து பார்த்தபோது, அவற்றிலும் ரோடமைன் பி இருப்பது தெரியவந்ததால், அங்கும் பஞ்சு மிட்டாய் விற்பது அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

பஞ்சு மிட்டாயில் கண்டறியப்பட்டுள்ள ரோடமைன் பி என்பது என்ன? அது வேறு எந்தெந்த உணவுப் பொருட்களில் உள்ளது? இதனை உட்கொள்வதால் என்ன பாதிப்பு?

ரோடமைன் பி என்பது என்ன?
ரோடமைன் பி என்பது ஒரு செயற்கை சாயம் ஆகும். இது பளிச் என்ற சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தை கொடுக்கக்கூடியதாகும். இந்த வேதியியல் நிறமி, தண்ணீரில் கலக்கக்கூடியத் தன்மை அதிகம் கொண்டதாலும், குறைந்த செலவில் உற்பத்தி செய்யக்கூடியது என்பதாலும், ஜவுளித்துறை, காகிதத் துறை, தோல் துறைகளில் வெகுவாக பயன்படுத்தப்படுகிறது.

ரோடமைன் பி- யில் உள்ள வேதிப் பொருட்கள் மக்கும் தன்மையற்றவை ஆகும். வெப்பம், வெளிச்சம் ஆகியவற்றை தாங்கக் கூடியவை.

ரோடமைன் பி தடை செய்யப்பட்டதா?
ரோடமைன் பி, ஜவுளி, தோல் உள்ளிட்ட துறைகளில் நிறமியாக பயன்படுத்துவதற்கு அனுமதி உண்டு. ஆனால் உணவுப் பொருட்களில் பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

உணவுப் பொருட்களில் செயற்கையாக நிறம் கொடுக்கும் பொருட்கள் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டதே. ஆனால், எந்தெந்த பொருட்களை பயன்படுத்தலாம், எவ்வளவு பயன்படுத்தலாம் என்ற வழிகாட்டுதல்களை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் வகுத்துள்ளது.

ரோடமைன் பி உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால், அதை உணவுப் பொருட்களில் பயன்படுத்துவதற்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் தடை விதித்துள்ளது. உணவுப் பொருட்கள் தயாரிப்பதில், பதப்படுத்துவதில், விநியோகிப்பதில் ரோடமைன் பி பயன்படுத்துவோர் உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு சட்டம் (2006)-ன் படி தண்டிக்கப்படுவர்.

-BBC-

Exit mobile version