பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்துவதற்கு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையினால், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இன்று பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
சங்கத்தின் நான்கு அதிகாரிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதுடன், ஏனையோர் அவ்விடத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு பொலிஸார் விடுத்த அறிவித்தல், போராட்டக்காரர்களுக்கும் காவல்துறை பிரிவினருக்கும் இடையே கடும் வாக்குவாதத்தை ஏற்படுத்தியது.
“எமது பிரச்சினைகள் தொடர்பாக பிரதமருடனும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். ஆனால் இதுவரை எங்களுக்கு எந்தப் பதிலும் நீதியும் கிடைக்கவில்லை. அவர்களிடமிருந்து பதில் கிடைக்கும் வரை எமது போராட்டத்தைத் தொடர்வோம். நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல என்பதை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கூறிக்கொள்ள விரும்புகிறோம்” என்று போராட்டக்காரர் ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
