சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் பயணிக்கும் பலரும் வாணியம்பாடி என்ற நகரத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்த ஊர் வழியாக நாளொன்றுக்கு சென்னை – பெங்களூரு மார்க்கத்தில் 140 ரயில்கள் வரை இயக்கப்படுகின்றன.
பல்வேறு தொழில் நிறுவனங்களும், கல்வி நிலையங்களும் இந்த ஊரைச் சுற்றி அமைந்துள்ள நிலையில், ரயில்வே மேம்பாலம் இல்லாத குறை 40 ஆண்டுகளாக இங்கு நீடித்து வருகிறது.
நாளொன்று 140 ரயில்கள் வரை இந்த வழித்தடத்தில் சென்று வரும் நிலையில், அவசர தேவைகளுக்காகச் செல்லும் பொதுமக்கள் ரயில்வே கேட்டில் கூடுதல் நேரத்தைச் செலவிடும் நிலை உள்ளது.
சாருமதி தொடர்ந்து பேசியபோது, “4 வருடங்களுக்கு முன்பு கொரோனா காலகட்டத்தில், நான் 9 மாத கர்ப்பிணியாக இருந்தேன். காலைப் பொழுதில் அதிக நேரங்களில் ரயில்வே கேட் மூடியே இருக்கும். அந்தச் சூழலில் எனக்கு பிரசவ வலி ஏற்பட்டு, மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் கேட்டில் காத்துக் கிடந்தோம். மருத்துவமனை செல்வதற்குள் ரத்தக் கொதிப்பு அதிகமாகி, என்னுடைய குழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டது.
பரிசோதித்த மருத்துவர்கள் நான் உயிர் பிழைத்ததே அபூர்வம் என்று தெரிவித்தனர். இரண்டாவதாக எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தைக்கும் நான் மருத்துவமனை சென்று வர மிகவும் சிரமப்பட்டேன். என்னைப் போன்ற கர்ப்பிணிப் பெண்கள் பலரும் இவ்வாறு அவதிப்படுகின்றனர். நாங்கள் இனிவரும் காலங்களில் இவ்வாறு பாதிக்கப்படாமல் இருக்க மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும்,” என்றார்.
வாணியம்பாடி நாடார் காலனி பகுதியில் வசித்து வரும் பிரபாகரன் பேசுகையில், “ரயில்வே மேம்பாலம் மற்றும் தரைப்பாலம் அமைப்பதற்காக எங்களுடைய இடத்தை அரசு கேட்டது. ஒரு நிலையான தொகையை எங்களுக்குத் தருவதாகவும் கூறியது. 17 நபர்கள் நிலத்தைத் தருவதாக ஒப்புக்கொண்டோம். அதற்குப் பிறகு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை,” என்றார்.
ஐந்து லட்சம் மக்களின் அன்றாட வாழ்க்கைப் பயணங்கள் இவ்வழியைத் தான் நம்பியுள்ளதாகவும், சிறு வியாபாரிகள், விவசாயிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் பலரும் இதனால் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 40 வருட காலமாக மேம்பாலம் வேண்டி மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர் மனுக்களை அனுப்பியும், பல போராட்டங்களை நடத்தியும் எந்தப் பயனும் இல்லை என்பது அப்பகுதியில் வாழக்கூடிய ஒட்டுமொத்த மக்களின் கருத்தாக உள்ளது.
ரயில்வே கேட்டில் நீண்டநேரம் காத்திருக்கும் மக்கள்
தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள முக்கியமான ஊர்களில் ஒன்று வாணியம்பாடி. இங்கு நியூடவுன் கேட் என்று அழைக்கப்படும் நகரத்தின் மையப் பகுதியில் ரயில்வே கேட் அமைந்துள்ளது.
இதற்கு அருகிலேயே அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம், காவல் நிலையம், உழவர் சந்தை, சந்தை, நீதிமன்றம், சில பள்ளி – கல்லூரிகள், நகராட்சி அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எனப் பல முக்கிய இடங்கள் இதைச் சுற்றியே உள்ளன.
வாணியம்பாடி: 40 ஆண்டுகளாக ரயில்வே மேம்பாலம் வேண்டி போராடும் மக்கள் – விடியல் கிடைக்குமா?
சென்னை – பெங்களூரு மார்க்கத்தில் செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் இந்த ரயில்வே கேட்டை கடந்துதான் செல்ல வேண்டும். ஒரு நாளைக்கு 140 ரயில்கள் வரை இந்தத் தடத்தில் செல்கின்றன.
ஒவ்வொரு முறை ரயில் செல்லும்போதும், 5 முதல் 10 நிமிடம் வரை இந்த ரயில்வே கேட் மூடப்படுகிறது. மக்கள் அதிகம் வெளியே செல்லும் காலை, மாலை நேரங்களில் இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
சில நேரங்களில் ரயில்வே கேட் திறந்த பிறகு அதைக் கடப்பதற்கு உள்ளாகவே, மற்றொரு ரயில் கடந்து செல்வதற்காக ரயில்வே கேட்டை மூடி விடுவதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பொதுமக்களுக்கு ஏற்படும் நேர விரயத்தைத் தவிர்க்கும் வகையில், இந்த ரயில்வே கேட்டை கடப்பதற்கு உதவியாக ரயில்வே மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அரசிடம் முறையிட்டு வருகின்றனர்.
45 நிமிடம் ரயில்வே கேட்டில் காத்திருந்த கர்ப்பிணி
வாணியம்பாடியில் 23 ஆண்டு காலமாக வசித்து வருகிறார் சாருமதி. பிபிசி தமிழிடம் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து அவர் பேசினார்.
“ரயில்வே கேட் போட்டால் ஒரு மணிநேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. தொடர்ந்து ரயில்கள் இயக்கப்படுவதால் நீண்ட நேரம் நாங்கள் நிற்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் மூலம் நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் அவசரத்திற்கு மருத்துவமனை செல்லக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,” என்கிறார் சாருமதி.
‘காத்திருக்கும் நோயாளிகள் இறந்துவிடும் அபாயம் உள்ளது’
வாணியம்பாடி: 40 ஆண்டுகளாக ரயில்வே மேம்பாலம் வேண்டி போராடும் மக்கள் – விடியல் கிடைக்குமா?
வாணியம்பாடி முத்தமிழ் மன்றச் செயலாளர் பிரகாசம் இது குறித்து நம்மிடம் பேசியபோது, “இப்பகுதியில் இமயம் கல்லூரியில் சுமார் 13,000 மாணவர்கள் படித்து வருகின்றனர். அது மட்டுமின்றி மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. ஆலங்காயம் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து வாணியம்பாடி மருத்துவமனைக்கு அன்றாடம் பல நோயாளிகள் வந்து செல்கின்றனர். ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான மக்கள் ரயில்வே கேட் வழியாகத்தான் சென்று வர வேண்டியுள்ளது.
ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குச் செல்லக்கூடிய நோயாளிகள் 45 நிமிடங்கள் கேட்டில் காத்திருப்பதால், அவர்கள் இறந்துவிடும் நிலையும் ஏற்பட்டுள்ளது,” என்கிறார்.
மேலும், “ரயில்வே மேம்பாலம் வேண்டி மத்திய, மாநில அரசுகளுக்கு மனுக்கள் பலவற்றை அளித்துள்ளேன். அரசியல் அமைப்புகள், பொதுமக்கள், சமூக அமைப்புகள் அனைவரும் ஒன்றிணைந்து மேம்பாலம் வேண்டும் எனக் கோரிக்கை வைத்து வருகின்றோம்.
இதுகுறித்து வணிகர் சங்க பேரமைப்பின் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வணிகர் சங்கம், முத்தமிழ் மன்றம், திருக்குறள் மன்றம் ஆகிய அமைப்புகள் சேர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலையைச் சந்தித்து மனு அளித்துள்ளோம்,” என பிரகாசம் கூறினார்.
‘மாணவர்களால் பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியவில்லை’
வாணியம்பாடி: 40 ஆண்டுகளாக ரயில்வே மேம்பாலம் வேண்டி போராடும் மக்கள் – விடியல் கிடைக்குமா?
“எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாத நகரமாகத்தான் வாணியம்பாடி உள்ளது. பேருந்து நிலையமும் எங்களுக்குச் சரியான இடத்தில் இல்லை. புதிய நகரம் ஒரு பகுதியில், பழைய நகரம் ஒரு பகுதியில், மருத்துவமனைகள், தொழில் வளாகங்கள் உள்ளிட்டவை ஒரு பக்கம் என்று உள்ளது,” என்கிறார் கல்லூரி மாணவர் சஞ்சய்.
மேலும், “ரயில் பாதைக்கு மேலே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பதுதான் 40 ஆண்டுக்கால கோரிக்கை. அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை. ஒவ்வொரு நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலிலும் இந்தத் தொகுதியில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள், நாங்கள் வெற்றி பெற்றால் மேம்பாலம் அமைத்துத் தருவதாகக் கூறி வாக்குகளை மட்டுமே வாங்கிச் செல்கின்றனர்,” என்கிறார் சஞ்சய்.
தொடர்ந்து பேசிய அவர், “9.20 மணிக்கு கேட் போட்டுவிட்டால் 10.20 வரை கேட்டை திறக்க மாட்டார்கள். மாணவர்கள் கேட்டில் நுழைந்தபடி எப்படியாவது சென்று விடுவோம். கல்லூரி மாணவிகள் பெருமளவில் அவதிப்பட்டு வருகின்றனர். பள்ளி பயிலும் மாணவர்கள் பலர் சைக்கிளை வைத்துக்கொண்டு கேட்டில் நிற்கின்றனர். ஆண் பிள்ளைகள் என்றால் அபாயகரமான நிலையில் ரயில்வே கேட் போடப்பட்ட பிறகும் சைக்கிளை கையில் எடுத்துக் கொண்டு போய்விடலாம். பெண்கள் எப்படிச் செல்வார்கள்?” என்று கேள்வியெழுப்புகிறார்.
அடிக்கடி கேட் மூடப்படுவதால், சரியான நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடிவதில்லை என்ற கவலையையும் சஞ்சய் வெளிப்படுத்தினார். “தேர்வுக்குப் போக வேண்டிய அவசரத்தில் ரயில் பாதையைக் கடக்கும்போது விபத்துகளும் ஏற்பட்டுள்ளது. தேர்வுக்கு தாமதமாகப் போய் பதற்றத்துடன் எழுதும் சூழலும் அரங்கேறி உள்ளது. எனவே இதையெல்லாம் கருத்தில் கொண்டு சீக்கிரம் மேம்பாலம் அமைக்க வேண்டும்,” என்றார் சஞ்சய்.
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கூறுவது என்ன?
வாணியம்பாடி: 40 ஆண்டுகளாக ரயில்வே மேம்பாலம் வேண்டி போராடும் மக்கள் – விடியல் கிடைக்குமா?
இந்தப் பிரச்னை குறித்து வேலூர் எம்.பி கதிர் ஆனந்திடம் பிபிசி தமிழ் பேசியபோது, “தேர்தல் வாக்குறுதியில் மேம்பாலம் கட்டித் தருவேன் என்று சொன்னது உண்மைதான், இல்லை என்று மறுக்கவில்லை. தேர்தலில் நான் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்ற உடனே அதற்கான வேலைகளைச் செய்யத் தொடங்கினேன். இரண்டரை ஆண்டு காலமாக அதிமுகவின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. எதை நாம் கொண்டு போனாலும் அவர்கள் அதில் கவனம் செலுத்தவில்லை.
ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்குச் சுற்றியுள்ள இடங்களை தமிழக அரசுதான் கையகப்படுத்தித் தரவேண்டும். மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றால் பொதுமக்களின் நிலங்களைக் கையகப்படுத்தி நஷ்ட ஈடு கொடுத்து நிதி ஒதுக்க வேண்டியுள்ளது. இதற்கு நீண்ட காலம் ஆகும்,” என்றார்.
மேலும், ரயில்வே துறையினர் தற்போது சுரங்கப்பாதை அமைப்பதற்கான முடிவை எடுத்துள்ளதாகவும் இதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புக்கொண்டுள்ளதாகவும் எம்.பி கதிர் ஆனந்தன் தெரிவித்தார். “நகராட்சி நிர்வாகத்திடம் என்ஓசி வந்துவிட்டால் பணியைத் தொடங்கி விடலாம். ரயில்வே சுரங்கப் பாதையை 8 மாதத்திற்குள் முடித்துக் கொடுத்துவிடலாம்,” என்று எம்.பி கதிர் ஆனந்த் தெரிவித்தார்.
மேம்பாலம் அமைப்பதற்கான இடங்களை தமிழக அரசு கையகப்படுத்தித் தந்தால்தான் ரயில்வே துறையின் மூலம் மேம்பாலம் அமைக்க முடியும் என சென்னை ரயில்வே மக்கள் தொடர்புத்துறை அலுவலர் குகனேசன் தெரிவித்தார்.
மக்கள் அளித்துள்ள மனுக்களின் மீது மாவட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்ற கேள்விக்கு மாவட்ட நிர்வாகம் பதிலளிக்க மறுத்துவிட்டது.