பாலிவுட் நடிகர் கோவிந்தா 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அரசியலில் குதித்துள்ளார். அவர் மகாராஷ்டிராவில் முதல்வர் ஷிண்டே தலைமையிலான சிவசேனா சார்பாக மும்பையில் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.
பாலிவுட் நடிகர் கோவிந்தா, 2004-ம் ஆண்டு அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார். அதே ஆண்டு பா.ஜ.க வில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய ராம்நாயக்கை மக்களவைத் தேர்தலில் தோற்கடித்தார். ஆனால் 2009-ம் ஆண்டுக்கு பிறகு அரசியல் நடவடிக்கையில் இருந்து ஒதுங்கி இருந்தார். தற்போது மக்களவை தேர்தல் சூடுபிடித்திருக்கிறது. மகாராஷ்டிராவில் சிவசேனா இரண்டாக உடைந்த பிறகு மும்பையில் மீண்டும் செல்வாக்கை நிலைநிறுத்தும் வேலையில் உத்தவ் தாக்கரே ஈடுபட்டுள்ளார். இதற்காக மும்பையில் மொத்தமுள்ள 6 தொகுதியில் 4 தொகுதிக்கு உத்தவ் தாக்கரே இதுவரை வேட்பாளரை அறிவித்து இருக்கிறார். அவரை எதிர்த்து ஒரு தொகுதியிலாவது வெற்றி பெறவேண்டும் என்று முதல்வர் ஷிண்டே நினைக்கிறார். மும்பை வடமேற்கு தொகுதியில் எம்.பி.யாக இருந்த கஜானன் கீர்த்திகர் இப்போது ஏக்நாத் ஷிண்டே அணியில் இருக்கிறார்.
ஆனால் அவரது மகன் அமோல் கீர்த்திகர் உத்தவ் தாக்கரே அணியில் சேர்ந்து வடமேற்கு மும்பை தொகுதியில் போட்டியிடுகிறார். அத்தொகுதியில் தனது கட்சி வேட்பாளரை நிறுத்த ஷிண்டே முடிவு செய்துள்ளார். ஆனால் அதற்கு சரியான வேட்பாளர் கிடைக்காமல் இருக்கிறது. இதனால் பல ஆண்டுகளாக அரசியலில் ஒதுங்கி இருக்கும் கோவிந்தாவை ஏக்நாத் ஷிண்டே கட்சியை சேர்ந்த கிருஷ்ணா ஹெக்டே நேற்று சந்தித்து பேசினார். இச்சந்திப்பை தொடர்ந்து நடிகர் கோவிந்தா நேற்று மாலை முதல்வர் ஷிண்டேயை சந்தித்து தன்னை சிவசேனாவில் சேர்ந்து கொண்டார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,” நான் மீண்டும் அரசியலுக்கு வருவேன் என்று நினைக்கவில்லை.
14 ஆண்டு வனவாசத்திற்கு பிறகு மீண்டும் அரசியலுக்கு வந்திருக்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடு நம்ப முடியாத வளர்ச்சி அடைந்து வருகிறது” என்றார். இதில் பேசிய ஏக்நாத் ஷிண்டே, “நடிகர் கோவிந்தா எந்த வித நிபந்தனையும் விதிக்காமல் கட்சியில் சேர்ந்திருக்கிறார். தேர்தல் சீட்டிற்காக அவர் கட்சியில் சேரவில்லை”என்றார். கோவிந்தாவை வடமேற்கு மும்பை தொகுதியில் நிறுத்த சிவசேனா நடவடிக்கை எடுத்து வருகிறது என்கிறார்கள் கட்சி விவகாரம் அறிந்த சிலர்.