கச்சத்தீவை விருப்பத்துடன் தாரைவார்த்த காங்கிரஸை கை தட்டித் தான் பாராட்ட வேண்டும் என்று பகடி செய்துள்ளார் இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
இது தொடர்பாக அமித் ஷா தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “காங்கிரஸ் கட்சியினர் கச்சத்தீவை விரும்பி தாரைவார்த்தனர். அதற்காக அவர்களுக்குக் கை தட்டித் தான் பாராட்ட வேண்டும். அந்தச் செயலுக்காக அவர்கள் கொஞ்சமும் வருந்தவில்லை. காங்கிரஸ் எம்.பி.க்கள் சில நேரங்களில் ‘தேசத்தை பிரிக்கிறார்கள்’ என்று பேசுகிறார்கள். சில நேரங்களில் அவர்களே தேசத்தின் ஒற்றுமையை, ஒருமைப்பாட்டை இழிவுபடுத்திப் பேசுகின்றனர். இதிலிருந்தே அவர்கள் நம் தேசத்தை பிளவுபடுத்தவே விரும்புகின்றனர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக கச்சத்தீவு இலங்கை வசம் சென்றது தொடர்பாக வெளியாகியிருக்கும் ஆர்டிஐ தரவு ஒன்றின் அடிப்படையிலான ஊடகக் கட்டுரையை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்த பிரதமர் மோடி, காங்கிரஸை நம்பகத்தன்மை அற்ற கட்சி என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
மேலும் தனது எக்ஸ் பதிவில், “கச்சத்தீவு இலங்கை வசம் சென்றது தொடர்பான அந்தத் தரவுகள் என்னை திகைக்க வைக்கிறது. காங்கிரஸ் கட்சி எப்படி அநாவசியமாக கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது என்ற புதிய உண்மை அதில் வெளிப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு இந்தியரையும் ஆத்திரமடையச் செய்துள்ளது. இந்தத் தரவு காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் நம்பமுடியாது என்று மக்கள் மனதில் மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களைப் பலவீனப்படுத்தும் நோக்கிலேயே கடந்த 75 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது” என்று கடுமையாக சாடியிருந்தார்.
இதன் நீட்சியாக மத்திய அமைச்சர்கள், பாஜக பிரமுகர்கள் பலரும் கச்சத்தீவு விவகாரத்தை கையிலெடுத்துப் பேசி வருகின்றனர்.
ஜெயலலிதாவை மேற்கோள் காட்டிய நிர்மலா சீதாராமன்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் பக்கத்தில் சட்டப்பேரவையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பேசிய வீடியோவைப் பகிர்ந்து, “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் சட்ட பேரவையிலேயே கச்சத்தீவைபற்றி எடுத்துசொன்ன உண்மை. திமுக தன் உண்மைக்கு புறம்பான பிரச்சாரத்தை நிறுத்தவேண்டும்.” எனப் பதிவிட்டுள்ளார்.
vk