சிபிஐ 2 ஆம் கட்ட விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் இன்று சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார். நாளை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகிறார்.
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய் யின் பரப்புரை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுவதற்காக, தவெக தலைவர் விஜய் தற்போது டெல்லி செல்லத் தயாராகி உள்ளார். இதற்காக, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து தற்போது சென்னை விமான நிலையத்திற்குப் புறப்பட்ட அவர், தனி விமானம் மூலம் டெல்லி நோக்கி பயணம் மேற்கொள்கிறார்.
வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற அந்த பரப்புரையின் போது, எதிர்பாராத விதமாக பெருமளவு மக்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த துயர சம்பவம் தமிழக அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பவத்தின் காரணங்கள் மற்றும் பொறுப்பாளர்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கின் ஒரு பகுதியாக, தவெக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் ஏற்கனவே டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர்.
