ஜனாதிபதி மற்றும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு

– நாட்டின் மின்சக்தித் துறையின் தற்போதைய மற்றும் எதிர்கால சவால்களை வெல்ல ஒன்றிணைந்து செயல்படுவோம்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்முறை குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. நுகர்வோருக்கு நியாயமான விலையில், வினைத்திறனான மற்றும் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துவதும், புதிய நிறுவனங்களின் உரிமையை அரசாங்கத்தின் கீழ் பேணுவதன் மூலம் ஒரு நாடாக வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுமே இந்த மறுசீரமைப்பின் நோக்கம் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இலங்கை மின்சார சபையின் ஊழியர்களுக்குரிய அனைத்து உரிமைகளும் இந்தச் செயல்முறையின் போது புதிய நிறுவனங்களுக்குள்ளும் உறுதிப்படுத்தப்படும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, மின்சார சபையாக இருக்கும் போதே தீர்க்கப்பட வேண்டிய, ஆனால் இதுவரை தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகள் குறித்தும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் விரிவாகக் கலந்துரையாடினார்.

இது ஒரு இலகுவான செயல்முறை அல்ல என்றும், நீண்ட கால மற்றும் திட்டமிடப்பட்ட ஒரு செயல்முறை என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த மாற்றம் மேற்கொள்ளப்படும் காலப்பகுதியில் ஊழியர்களுக்கும் புதிய நிறுவனங்களுக்கும் இடையே சிறந்த புரிதலுடன் கூடிய கலந்துரையாடல்களை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தையும், அதற்கான முறையான வழிமுறையொன்றை அமைப்பதன் அவசியத்தையும் விளக்கினார்.அதேபோன்று, ஊழியர்களின் மன நிம்மதியை உறுதிப்படுத்தி, அவர்களின் எதிர்கால எதிர்பார்ப்புகளை இனங்கண்டு, அவர்கள் தமது சேவையைத் திருப்தியுடன் வழங்கக்கூடிய சுதந்திரமான சூழலை உருவாக்கிக் கொடுப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அனைவரும் ஒன்றிணைந்து புரிந்துணர்வுடனும் நாட்டைப் பற்றிய உணர்வுடனும் செயற்படுவதன் மூலம் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இந்தச் செயற்பாட்டை வெற்றிகரமாக்கி நாட்டின் மின் நுகர்வோருக்குச் சிறந்த சேவையை உறுதிப்படுத்துவதற்கும், மின்சக்தித் துறையின் தற்போதைய மற்றும் எதிர்கால சவால்களை வெல்வதற்கும் ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்து தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.

Exit mobile version