மின்சாரக் கட்டணத்தை மேலும் 53% இனால் அதிகரிக்க முன்மொழிவு.. நிலக்கரி நஷ்டம் 2000 கோடி..

சமீபகாலமாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலக்கரி கொடுக்கல் வாங்கல் காரணமாக, 2026 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலப்பகுதியில் மாத்திரம் 20 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கலாநிதி விதுர ரலபனாவ சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நஷ்டத்தை ஈடுசெய்வதற்காக, தற்போது நடைமுறையிலுள்ள மின்சாரக் கட்டணத்திற்கு மேலதிகமாக மேலும் 53% பாரிய கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ள தேசிய அமைப்பு இயக்கப் பிரிவு (NSO) முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

கலாநிதி ரலபனாவ சுட்டிக்காட்டியுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

இந்த நிலையில், மின்சாரக் கட்டணத்தை 40.5 பில்லியன் ரூபாவினால் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும், அதில் பாதியளவிற்கும் அதிகமானவை நேரடியாக இந்த நிலக்கரி நெருக்கடியின் விளைவு என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் கூற்று குறித்து கேள்வி

நிலக்கரி மோசடியால் ஏற்பட்ட நஷ்டம் 7 பில்லியன் ரூபா மாத்திரமே என ஜனாதிபதி விடுத்த அறிக்கை மற்றும் அந்த நஷ்டத்தை மக்கள் மீது சுமத்த மாட்டோம் என வழங்கிய வாக்குறுதியை கலாநிதி ரலபனாவ கடுமையாகக் கேள்விக்குட்படுத்தியுள்ளார்.

“ஜனாதிபதி 7 பில்லியன் ரூபா நஷ்டம் பற்றி கூறினாலும், உண்மையான நஷ்டம் அதைவிட மிக அதிகமாகும். அதேபோல், அந்த நஷ்டத்தை மக்கள் மீது சுமத்த மாட்டோம் எனக் கூறினாலும், முன்வைக்கப்பட்டுள்ள கட்டணத் திருத்த முன்மொழிவுகள் ஊடாக மக்களே இந்தச் சுமையைத் தாங்க வேண்டியிருக்கும் என்பது தெளிவாகிறது,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு டீசல் விலை அதிகரிப்பு மற்றும் அதிக விலைக்கு எரி எண்ணெய் (HFO) இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் காரணமாக இந்த நஷ்டம் மேலும் அதிகரிக்கக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார். சம்பந்தப்பட்ட விநியோகஸ்தரிடம் இருந்து இந்த நஷ்டத்தை மீட்டெடுப்பதற்கான முறையான திட்டத்தை அரசாங்கம் இதுவரை முன்வைக்கவில்லை என்றும், விநியோகஸ்தரின் சொத்துக்களை விட இந்த நஷ்டம் அதிகமாக இருப்பதால் அதனை அறவிடுவது நடைமுறைச் சாத்தியமற்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு பதிலாக அரசாங்கம் உண்மைகளை மறைத்து வருவதாகவும், இவ்வாறான பொய்யான அறிக்கைகள் மூலம் எரிசக்தி துறையின் நெருக்கடி மேலும் தீவிரமடையும் என்றும் கலாநிதி விதுர ரலபனாவ மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version