“மலையக மகிழ்ச்சி” திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தில் புதிய வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது
மலையக மகிழ்ச்சி” திட்டத்தின் கீழ் புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (26) பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் பண்டாரவெல பிரதேச செயலகப் பிரிவில் நாயாபெத்த தோட்டம் மற்றும் ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவில் மல்வன் பிரிவில் இடம்பெற்றது.
மண்சரிவு அபாய வலயங்களில் வாழும் தோட்ட மக்களைப் பாதுகாத்தல் தொடர்பான விசேட நடவடிக்கையாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தின், பண்டாரவளை பிரதேச செயலகப் பிரிவில் நாயாபெத்த தோட்டத்தில் அபாயத்தை எதிர்கொண்டுள்ள 11 குடும்பங்கள் மற்றும் ஹால்துமுல்ல பிரதேச செயலகப் பிரிவில் மல்வான் பிரிவில் ஆபத்தை எதிர்கொண்டுள்ள 23 குடும்பங்களுக்காகவும் இந்த புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளன.
இந்த வீட்டுத் தொகுதியில் 34 வீடுகளை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் 108 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை ஒதுக்கீடு செய்வதற்கு திட்டமிட்டுள்ளது.
ஒரு வீட்டுத் தொகுதியில் ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் 28 இலட்சம் ரூபாய் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 4 இலட்சம் ரூபாய்கள் செலவிடுவதுடன் 10 பேர்ச்சஸ் காணி இதற்காக பயனாளிகளுக்கு உரித்தளிக்கப்பட உள்ளது.
