நவ பாசிச பின்புலத்தைக் கொண்ட இத்தாலி சகோரர்கள் கட்சியின் தலைவர் கியோர்கியா மெலோனி, இரண்டாம் உலகப் போருக்குப் பின் இத்தாலியின் முதல் தீவிர வலதுசாரி பிரதமராக பதவி ஏற்றார்.
இத்தாலியின் முதல் பெண் பிரதமராகவே அவர் கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி செர்கியோ மெட்டரெல்லா முன் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஒரு நாளைக்கு முன்னரே அவருக்கு அரசு அமைக்கும்படி ஜனாதிபதி அழைப்புவிடுத்தார்.
2012 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சகோதரர்கள் கட்சி, வலதுசாரி லிகா கட்சி மற்றும் பழைமைவாத போர்சா இத்தாலி கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. எனினும் முக்கிய அமைச்சர்களை பகிர்ந்து கொள்வதில் கூட்டணி கட்சிக்குள் முறுகல் நீடித்து வந்த நிலையிலேயே புதிய ஆட்சி அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மெலோனி தனது தேர்தல் பிரசாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் குடியேற்றவாசிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. உக்ரைன் போரினால் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வலு சக்தி பிரச்சினை தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் புதிய அரசு நாட்டில் அதிரடி மாற்றங்களை செய்வது கடினம் என்று கூறப்படுகிறது. சகோதரர்கள் கட்சி கடந்த செப்டெம்பர் பிற்பகுதியில் நடந்த பொதுத் தேர்தலில் 25 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைக் கைப்பற்றி வெற்றியீட்டி இருந்தது.
