இலங்கை ரக்பி தலைவருக்கு விளையாட்டு அமைச்சு தடை

இலங்கை ரக்பி தலைவர் ரஸ்லி இல்யாஸ் இலங்கையில் எந்த ஒரு ரக்பி செயற்பாடுகளிலும் ஈடுபடுவதில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருப்பதாக விளையாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.

ஆசிய ரக்பி சங்கம் சில மாதங்களுக்கு முன் இல்யாஸை இடைநிறுத்திய நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, இலங்கை ரக்பி செயலாளர் மற்றும் தலைமை நிறைவேற்று அதிகாரிக்கு அனுப்பிய கடிதத்தில், இலங்கை ஆடவர் மற்றும் பெண்கள் ரக்பி வீரர்கள் மற்றும் இந்த விளையாட்டின் எதிர்கால நலனை கருத்தில்கொண்டு செயற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

ஆசிய ரக்பியினால் இல்யாஸ் மீது நடத்தப்படும் நிலுவையில் உள்ள விசாரணை முடியும்வரை அமைச்சு இந்த முடிவை எடுத்துள்ளது.

இது தொடர்பில் ஏற்கனவே சட்ட ஆலோசனை பெற்று வருவதாக இல்யாஸ் தெரிவித்துள்ளார். “அமைச்சர் முடிவொன்றை எடுத்திருக்கும் நிலையில் அமைச்சரின் முடிவை நான் மதிக்கிறேன். ஆனால் ஏற்கனவே சட்ட ஆலோசனையை பெற்று வருவதோடு, இப்போதைக்கு இதனை மாத்திரமே என்னால் கூற முடியுமாக உள்ளது” என்று அவர் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

ஆசிய ரக்பி சங்கத்தின் விதிகளை மீறி செயற்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு அந்த சங்கம் இல்யாஸ் மீது தடை விதித்த நிலையில் அது பற்றி ஆறு மாதங்களுக்கு முன்னரே விளையாட்டு அமைச்சு கடிதம் அனுப்பப்பட்டது.

எவ்வாறாயினும் விளையாட்டு அமைச்சு அந்தக் கடிதத்திற்கு அமைய செயற்படாத நிலையில் இல்யாஸ் இலங்கை ரக்பி தேர்தலில் வெற்றியீட்டி மீண்டும் தலைவராக தெரிவாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version