நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. முதல் கட்டத்தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் நேரத்தில் அதிக அளவு திரைப்பட நட்சத்திரங்களை பிரசாரத்திற்குப் பயன்படுத்துவது வழக்கம்.
ஆனால் இந்த தேர்தலில் அதிக அளவில் திரைப்பட நட்சத்திரங்கள் போட்டியிடுகின்றனர். பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் முதல் முறையாக இந்தத் தேர்தலில் பா.ஜ.க சார்பாக தனது சொந்த ஊரான ஹிமாச்சல பிரதேசத்தில் மாண்டி தொகுதியில் போட்டியிடுகிறார். கங்கனா குறித்து காங்கிரஸ் வேட்பாளர் சுப்ரியா சர்ச்சைக்குறிய வகையில் பேசியதால் அவர் மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம் நடிகை ஊர்மிளா மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட போது அவர் குறித்து கங்கனா தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களும் இப்போது வெளி வர ஆரம்பித்துள்ளன.
பா.ஜ.க சார்பாக ஏற்கெனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகை ஹேமாமாலினி மீண்டும் மதுரா தொகுதியில் நிறுத்தப்பட்டு இருக்கிறார். 2014ம் ஆண்டிலிருந்து ஹேமாமாலினி இத்தொகுதியில் வெற்றி பெற்று வருகிறார். நடிகர் ரவி கிஷன் பா.ஜ.க சார்பாக மீண்டும் உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். 2014ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்டு தோல்வி அடைந்த பிறகு 2019ல் பா.ஜ.க சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
நடிகர் மனோஜ் திவாரி பா.ஜ.க சார்பாக வடகிழக்குத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இவரும் 2014ம் ஆண்டில் இருந்து இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார். பா.ஜ.க தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த நடிகர் சத்ருகன் சின்ஹா மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக அசன்சோல் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். பஞ்சாப்பில் பிரபல பாப் பாடகராக விளங்கும் ஹன்ஸ் ராஜ் பஞ்சாப்பில் பரிட்கோட் தொகுதியில் பா.ஜ.க சார்பாக நிறுத்தப்பட்டுள்ளார். கடந்த தேர்தலில் டெல்லியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஹன்ஸ் ராஜ் இப்போது பஞ்சாப்பில் இருந்து போட்டியிடுகிறார். இதே தொகுதியில் பஞ்சாப் நடிகர்கள் பலரும் போட்டியிடுகின்றனர். ஆம் ஆத்மி கட்சி சார்பாக காமெடியன் கரம்ஜித் போட்டியிடுகிறார்.
நேகா சர்மா
நேகா சர்மா
இங்கு காங்கிரஸ் சார்பாக பாடகர் முகமத் சாதிக் எம்.பி.யாக இருக்கிறார். அவர் மீண்டும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி.வி.யில் ராமாயண தொடர்களில் ராமராக நடித்த அருண் கோயல் என்பவரை பா.ஜ.க இம்முறை மீரட் தொகுதியில் நிறுத்தி இருக்கிறது. பாலிவுட் நடிகர் கோவிந்தா சமீபத்தில் சிவசேனாவில் சேர்ந்தார்.
அவர் வடமேற்கு மும்பை தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையில் ஜூன் 20ம் தேதி தேர்தல் நடப்பதால் போட்டியாளர்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. பா.ஜ.க சார்பாக சண்டிகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகை கிரண் கர் பெயர் இன்னும் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. நடிகர் சன்னி தியோல் தனக்கு தேர்தல் அரசியலில் விருப்பம் இல்லை என்று கூறிவிட்டதால் அவர் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை. இவர் கடந்த தேர்தலில் பஞ்சாப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தார்.
நடிகை நேஹா சர்மா மற்றும் ஸ்வரா பாஸ்கர் ஆகியோர் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட முயன்று வருகின்றனர். இதில் ஸ்வரா மும்பையில் இருந்தும், நேஹா சர்மா பீகாரில் இருந்தும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். நடிகர் சோனு சூட்டிற்கு இரண்டு முறை ராஜ்ய சபை உறுப்பினர் பதவி வாய்ப்பு வந்தது. ஆனால் அதனை நிராகரித்துவிட்டார். தமிழகத்திலும் நடிகை ராதிகா பா.ஜ.க கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இம்முறை நடிகர்கள் பெரிய அளவில் தேர்தலில் போட்டியிடவில்லை. நடிகை விஜயசாந்தி காங்கிரஸ் சார்பாக போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரும் அரசியலில் ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்.
Discussion about this post