கார்த்திகை தீபம் என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோயில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும். கார்த்திகைப்பூ என்றும் காந்தள் மலர் என்றும் இலக்கியங்களில் சிறப்பாகக் குறிப்பிடப்படுகின்ற மலரானது கார்த்திகை விளக்கீடு காலத்தில் மலர்ந்திருப்பது சிறப்பம்சமாகும்.
கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம் ஆகும். தமிழர்கள் தம் இல்லங்களில் 27 தீபம் ஏற்றுவது இன்றைய நாளின் சிறப்பு. இவை அஷ்வினி முதல் ரேவதி வரையான 27 நட்சத்திரங்களைக் குறிக்கும். பண்டைய தமிழர்கள் ஒரு மாதத்தில் உள்ள நாட்களை 27 நட்சத்திரங்களின் பெயர்களால் வழங்கி வந்தனர். அந்நட்சத்திரங்களில் ஒரு தினமான கார்த்திகை-நாள் இன்றாகும். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வருகின்ற கார்த்திகை-நாள் முக்கியமான நாளாகத் தமிழர்களால் வழிபடப்பட்டு வருகின்றது.
மாலை வேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீபவிளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர். ஆலயத்தின் முன்புறத்தே வாழைமரம் நட்டு பனையோலைகளால் அதனைச் சுற்றி அடைத்து ‘சொக்கப்பனைக்கு’ அக்கினியிட்டு ஜோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப் பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர். இல்லங்களையும்,வர்த்தக நிலையங்களையும் விளக்குகளால் அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் மிதக்க வைத்து வழிபடுவர்.
படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும், காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும்
நானே பெரியவன் என்று வாதாடிப் பல வருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக் கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட ஜோதியை எல்லோரும் காணும்படி காண்பித்தருள வேண்டும் என்று வேண்ட அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காண்பித்தருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகைத்தீப வழிபாடாகும்.
தமிழகத்தில் பஞ்சபூத திருத்தலங்களில் அக்னிக்குரிய திருத்தலமான திருவண்ணாமலையில் இக்கார்த்திகை விழா ‘மகாதீபம்’ எனும் திருநாமத்துடன் வெகுவிமரிசையாக அனுஷ்டிக்கப்படுகின்றது. இது திருவண்ணாமலையின் சிகரத்தின் மீது தீபம் ஏற்றும் விழாவாகும். இம்மகாதீபம் இலக்கியங்களில் ‘சர்வாலய தீபம்’ மற்றும் ‘கார்த்திகை விளக்கீடு’ என்றும் அழைக்கப்படுகிறது. திருவண்ணாமலையில் தீபத் திருநாளன்று அதிகாலையில் மலையடிவாரத்தில் ஏற்றப்படுவதைப் பரணி தீபம் என்றும், மாலையில் மலையுச்சியில் ஏற்றப்படுவதை மகாதீபம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இத்தீபம் சிவன் அக்னி பிழம்பாக, நெருப்பு மலையாக நின்றார் என்ற ஐதீகப்படி மலையில் ஏற்றப்படுகிறது.
இத்தீபம் ஏற்றும் மலையானது 2668 அடி உயரம் கொண்டது. இம்மலை மீது செம்பு, இரும்பு கொண்டு தயாரிக்கப்பட்ட கொப்பரையில் தீபம் ஏற்றுவர்.
1668- இல் பிரதானி வேங்கடபதி ஐயர் என்பவர் வெண்கலத்தை கொப்பரையாகச் செய்து கொடுத்தார். பின்பு 1991-இல் இரும்பினால் உருவாக்கப்பட்ட கொப்பரை தற்போது உள்ளது. இது பக்தர்களின் உபயம் ஆகும். இக்கொப்பரையை மலை மீது வைக்கும் உரிமை பெற்றவர் பர்வத ராஜகுலத்தினர் (மீனவர்) ஆவர். இத்தீபம் சுமார் 3000 கிலோவுக்கும் மேற்பட்ட நெய்யும், 1000 மீட்டர் காடா துணியும் பயன்படுத்தி ஏற்றப்படுகிறது.
இம்மகாதீபம் ஏற்றுகின்ற உரிமை பர்வத ராஜகுலத்தினர் பெற்றுள்ளனர். இவர்கள் ‘செம்படவர்கள்’ எனப்படுவர். சிவன் படையினர் செம்படவர்கள். இதன் நினைவாக இவர்களுக்கு இவ்வுரிமை வழங்கப்படுகிறது. இவர்கள் தங்களுக்குள் முறை போட்டுக் கொண்டு ஆண்டுதோறும் மலைமீது தீபம் ஏற்றுகின்றனர்.
மலையில் தீபம் ஏற்றுவதற்கு முன்பு கோயிலில் பஞ்சமூர்த்திகளுக்குத் தீபதரிசனம் காண்பிக்கப்படும். இந்நேரத்தில் பக்தர்கள் கூட்டம் கோவிலில் இத்தீபத்தைக் காண அலைமோதும். அப்பொழுது அடியார்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்று முழக்கம் இடுவார்கள்.
கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலையை வலம் வருதல் மிகவும் சிறப்பானது. அந்நாளில் வலம் வருவதால் அவர்களுக்குப் பாவவிமோசனம் கிடைக்கும், கர்ம வினைகள் நீங்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
இலங்கை, இந்தியா, மலேஷியா, சிங்கப்பூர், மொரீஷியஸ் மற்றும் இந்துக்கள் செறிந்து வாழும் தேசங்களில் கார்த்திகை தீபத்திருநாள் வெகுவிமரிசையாக பக்திபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.
Discussion about this post