கொழும்பில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்க நடைமுறைப்படுத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா அமைப்பின் மூலம் முதல் 15 நாட்களுக்குள் (பிப்ரவரி 1 முதல் 15 வரை) மொத்தம் 793 போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த குற்றவாளிகளுக்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்குமாறும், குற்றப்பத்திரிகையை அவர்களது வீட்டு முகவரிக்கு அனுப்புமாறும் நாடு முழுவதும் உள்ள 300 பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
“பாதுகாப்பு கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை பிடிக்கும் இந்த நடைமுறை நீண்ட காலமாக செயல்படுத்தப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இது எளிதான காரியம் அல்ல. இந்தத் திட்டத்தை நாங்கள் தொடங்கிய பிறகு வாகனப் பதிவுகளும் அதிகரித்துள்ளன. இதனால் திறந்த ஆவணங்களில் வாகனங்கள் விற்பனை கூட பாதிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாட்டை நாம் விரிவுபடுத்த வேண்டும்” என குற்ற மற்றும் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
கொழும்பில் இதுவரை 33 இடங்களில் 108 பாதுகாப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது தவிர, போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை பிடிக்க, தீவின் மற்ற நகரங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்ட வேன்கள் திரட்டப்பட்டுள்ளன.




Discussion about this post