விஸ்கி வடிகட்டிய கழிவுநீரினை பயன்படுத்தி பசுமை எரிபொருளை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.
எரிபொருள் என்பது மனிதனின் முக்கிய தேவையாக உள்ளது. ஸ்காட்லாந்த் எடின்பர்க் ஹெரியட் வாட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் விஸ்கி வடிகட்டிய கழிவுநீரிலிருந்து பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்துள்ளனர்.
1 கிலோ பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய 9 கிலோ தண்ணீர் தேவைப்படுகிறது. 1 லிட்டர் மால்ட் விஸ்கி உற்பத்தியில் இருந்து சுமார் 10 லிட்டர் எச்சம் உருவாகிறது.
பொதுவாக ஹைட்ரஜன் சூரிய ஒளி அல்லது காற்று போன்ற புதுப்பிக்கதக்க மூலங்களிலிருந்து உருவாக்கப்படுகிறது. மின்னாற்பகுப்பு முறையில் மின்சாரத்தைச் செலுத்தி, நீர் மூலக்கூறிலிருந்து ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் தனியாகப் பிரிக்கப்படுகிறது.
மின்னாற்பகுப்பு முறை அல்லது மின்னாற்பகுப்பு செய்யும் சாதனங்கள் புதிய நீரில் மட்டுமே செயல்படும். கழிவுநீரைச் சேர்க்கும்போது அந்த சாதனங்கள் செயலிழந்து போகின்றன. ஆனால், ஆராய்ச்சியாளர்கள் நானோ துகள்கள் மூலம் இந்த சவாலைச் சமாளிக்க முடியும் என்று காட்டியுள்ளனர்.
தூய்மையான நீருக்குப் பதிலாக விஸ்கி உற்பத்தியில் கிடைக்கும் கழிவுநீரிலிருந்து பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர்.
இதற்காக இவர்கள் புதிய நானோ அளவிலான மெட்டிரியலை உருவாக்கினர். இந்த நானோ அளவிலான பொருள் மனித முடியின் விட்டத்தில் 10,000 மடங்கு இருக்கும். கழிவுநீரைச் சுத்திகரிக்கும் இந்த நானோ துகள்கள் `நிக்கல் செலினைடு’ என்று அழைக்கப்படுகின்றன.
நானோ மெட்டிரீயலை பயன்படுத்தி சுத்தமான புதிய நீருக்கு பதிலாக கழிவுநீரைப் பயன்படுத்தினர். இது புதிய நீருடன் ஒப்பிடுகையில் பசுமை ஹைட்ரஜனை சற்று அதிக அளவில் உற்பத்தி செய்தது.
இது குறித்த தகவல்கள் `Sustainable Energy & Fuels’ என்ற இதழில் கட்டுரை வெளியாகி உள்ளது. இந்த இதழின் இணை ஆசிரியர் சுதாகர் பிச்சைமுத்து ஒரு செய்திக் குறிப்பில், “கிரகத்தைப் பாதுகாக்கத் தூய்மையான நீர் மற்றும் பிற இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும்.
எனவே அசுத்தமான தண்ணீரில் இருக்கும் கழிவுபொருட்களை அகற்றுவதன் மூலம், டிஸ்டில்லரி கழிவுநீரை எவ்வாறு பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்குப் பயன்படுத்துவது என்பது குறித்து இந்த ஆராய்ச்சி கவனம் செலுத்தியது’’ என்று தெரிவித்துள்ளார்.
Discussion about this post