சப்பாத்தி எனும்போது எண்ணிக்கையில் கவனமாக இருப்போம். அதற்காக, வெள்ளை சாதம் என்பது வெயிட் லாஸுக்கு எதிரி என அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம்.
என்னுடைய தோழிக்கு 36 வயதாகிறது. 70 கிலோ எடையிருந்த அவர், ஆறே மாதங்களில் 8 கிலோ எடை குறைத்திருக்கிறார். அரிசி சாதத்தை அறவே தவிர்த்ததுதான் தனது எடைக்குறைப்பின் ரகசியம் என்கிறார். வெயிட்லாஸ் முயற்சிகளில் இருப்போர் வெள்ளை சாதத்தைத் தவிர்க்க வேண்டுமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த , ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.
எடைக்குறைப்பு என்றதுமே கட்டாயம் அரிசி சாதத்தைத் தவிர்த்தாக வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. தவறான எண்ணம் அது.
சாதம், சப்பாத்தி என இரண்டையும் ஒப்பிடும்போது, இரண்டிலுமே ஒரே அளவிலான கலோரிகள்தான் இருக்கும். ஆனால், வெள்ளை அரிசி சாதத்தையே பலரும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். அதில் அந்த அளவுக்கு நார்ச்சத்து கிடையாது என்பதுதான் உண்மை. அதுவே, சப்பாத்தி என்று வரும்போது முழுகோதுமை மாவில் தயாரிப்பதால், அதில் நார்ச்சத்தும், சிறிதளவு புரதச்சத்தும் இருப்பதை மறுப்பதற்கில்லை.
சப்பாத்தி சாப்பிடும்போது அதை மென்று சாப்பிட வேண்டியிருப்பதால், தாடை அசைவு அதிகரிக்கும். அது மூளைக்கு சிக்னல் அனுப்பும். அதன் விளைவாக சீக்கிரமே வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும், அதனால் குறைவாகச் சாப்பிடுவோம்.
அதுவே, சாதம் என்றால், அதை ரொம்ப சிரமப்பட்டு மென்று சாப்பிடத் தேவையில்லை. மென்மையாக இருப்பதால் அதிகம் மெல்லாமல் விழுங்கிவிடுவோம். அதனால் மெல்லும் எண்ணிக்கையும் தாடை அசைவும் குறையும்.
அது மட்டுமன்றி, சாதம் சாப்பிடும்போது சாம்பார், ரசம், தயிர் என வகை, வகையாகச் சாப்பிடுவதால் அளவும் அதிகரிக்கும். சப்பாத்தி எனும்போது எண்ணிக்கையில் கவனமாக இருப்போம். அதற்காக, வெள்ளை சாதம் என்பது வெயிட் லாஸுக்கு எதிரி என அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம்.
நீங்கள் சாதம் சாப்பிட்டும் உடல் எடையைக் குறைக்கலாம். வழக்கமாக சாப்பாட்டுத் தட்டில், சாதம் நிறையவும், தொட்டுக்கொள்ள கொஞ்சமாக காய்கறியோ, அசைவ உணவோ வைத்துக் கொள்வோம். எடையைக் குறைக்க வேண்டும் என்றால் காய்கறி மற்றும் அசைவ புரதத்தின் அளவை அதிகரித்து, சாதத்தின் அளவை தொட்டுக்கொள்வது போன்ற அளவுக்குக் குறைத்துச் சாப்பிடப் பழகுங்கள். இந்த முறையில் நீங்கள் சாதத்தைத் தியாகம் செய்யாமலே எடையைக் குறைக்கலாம்.
Discussion about this post