முன்னணித் தரவு நச்சாக்கம் (Frontrunning data poisoning): பல தகவல் பேழைகள், விக்கிபீடியா போன்ற பொதுவெளியில் அப்போது இருக்கும் தகவல்களை அப்படியே சுரண்டி எடுத்து அதன் உதவியில் தயாரிக்கப்பட்ட உப பேழையாக (Snapshot) சேமித்துக்கொண்டே வரும்.
பெயர் பெல்லா. வயது 30. நிறைமாத கர்ப்பிணி. மன அழுத்தம் காரணமாக உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்து பாலத்திலிருந்து கீழே குதிக்க, தண்டுவட பாதிப்பில் மூளை செயலிழந்துவிடுகிறது. அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரிடம் பெல்லா அழைத்து வரப்படுகிறார். கீழே விழுந்த வேகத்தில் வயிற்றில் இருக்கும் குழந்தையின் உடல் சேதமாகிவிட்டாலும், மூளை பாதிக்கப்படாமல் இருப்பது தெரியவருகிறது. இயங்கிக்கொண்டிருக்கும் அன்னையின் உடலைக் காப்பாற்ற, அவரது இறந்த மூளையை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் சிசுவின் மூளையை மாற்றிவிடுகிறார் மேற்படி வில்லங்க மருத்துவர். 30 வயது உடலில் ஒரு வயது மூளையுடன் மருத்துவமனையிலிருந்து வெளிவரும் பெண்ணுக்கு அறிவு வளர்ச்சி எப்படி இருக்கும்?
“வெயிட், அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த கட்டுரைத்தொடரில் இப்படி கலர் கலராகக் கதை விடுகிறாயே, அண்டன்!” என்ற எண்ணம் வந்தால் தவறில்லை. மார்ச் மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற ஆஸ்கர் விழாவில் சிறந்த நடிகைக்கான விருது வாங்கிய எம்மா ஸ்டோன் நடித்த ‘Poor Things’ திரைப்படத்தின் தொடக்கமே அது.
மருத்துவரீதியில் மூளை மாற்று அறுவை சிகிச்சை என்பது சாத்தியமில்லை. எனினும் புனைவிற்காக எடுக்கப்பட்ட அந்தத் திரைப்படம், ஆணாதிக்க உலகில் பெண் எப்படி அடிமையாகிறாள், எப்படி அந்தத் தடைகளை உடைத்தெறிந்து விடுதலை அடைகிறாள் என்பதான பெண்ணியல் தத்துவார்த்தப் பின்புலம் கொண்டது என்றெல்லாம் தீவிர திரைப்பட விமர்சகர்கள் இந்தப் படத்தை அணு அணுவாக உடைத்து விவாதிப்பதை ஆன்லைனில் பார்க்க முடிகிறது.
திரைப்படம் பார்த்துவிட்டு, நீள் நடைப்பயிற்சி சென்ற எனக்கு வந்தது AI கோண சிந்தனை.
LLM, LAM, GPT போன்ற மூன்றெழுத்துகளால் நிறைந்திருக்கும் AI உலகின் தீரா தாகம் – மனித நரம்பியல் எப்படி இயங்குகிறது என்பதை முழுக்கப் புரிந்துகொள்வது. இதனால்தான், AI துறையில் அமைக்கப்படும் அடிப்படை வடிவுகளின் பெயர் ‘நரம்பியல் பிணையம் (Neural Network)’ என்று அழைக்கப்படுகிறது என்பதை இந்தத் தொடரின் முந்தைய கட்டுரை ஒன்றில் விரிவாகப் பார்த்தோம்.
நிதர்சனம் என்னவென்றால், நரம்பியலின் தலைமையகமான மூளையின் செயல்பாடு பற்றி இன்றைய மருத்துவ உலகின் புரிதல் இருபது சதவிகிதம் அளவிற்கும் கீழ். பிறக்கும் குழந்தையின் சராசரி எடை மூன்றரைக் கிலோ. அதில் 25 சதவிகிதத்தை மூளை எடுத்துக்கொள்கிறது. கிட்டத்தட்ட 400 கிராம் அளவில் இருக்கும் மூளை, மற்ற அனைத்து பாகங்களையும்விட வேகமாக வளர்கிறது. குழந்தைக்கு ஒரு வயதாகும்போது மூளையின் அளவு இரண்டு மடங்காகிவிட, ஐந்து வயது ஆகும்போது முதிர்ந்த மனித மூளையின் 90 சதவிகித வளர்ச்சியைத் தொட்டுவிடுகிறது. ஆயுள்காலம் முழுக்க வளர்ந்துகொண்டிருக்கும் மூளையின் கற்கும் திறன் உண்மையில் ஓர் அறிவியல் அதிசயம். உதாரணத்திற்கு, ஒரு வயதாகிய குழந்தைக்கு ஐம்பது வார்த்தைகள் வரை தெரிய வரும். அதுவே, ஒன்றரை வயதில் இரண்டு மடங்காகி, இரண்டாவது வயதை அடைகையில், நான்கு மடங்காகிவிடுகிறது.
இந்தத் திறனை ஆழ்ந்து தெரிந்துகொள்ள மனித உடலியியல், நரம்பியல் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆர்வம் அதிகம். அது மட்டுமல்ல, கணினியியல், குறிப்பாக AI ஆராய்ச்சியாளர்களுக்கும் அதீத ஆர்வம் உள்ளது. இது புரிந்துகொள்ளப்பட முடிகிற ஒன்றுதான்.
Discussion about this post