இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடிக்கு அருகில் நான்கு பேர் கொண்ட இலங்கை குடும்பம் ஒன்று சட்டவிரோதமாக வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரு தம்பதியும் அவர்களது இரண்டு குழந்தைகளும் வெள்ளிக்கிழமை இரவு இந்தியாவுக்குள் நுழைந்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர் முருகானந்தன் (45), அவரது மனைவி ரீட்டா மேரி (46) மற்றும் அவர்களது இரு பிள்ளைகள் என நான்கு பேர் அடையாளம் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் இருந்து இரவு 9.30 மணியளவில் பணம் செலுத்தி சட்டவிரோத படகில் ஏறி வந்த குடும்பத்தினர், வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணியளவில் அரிச்சல்முனையில் உள்ள மணல்மேடு ஒன்றில் இறக்கிவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய கடலோர காவல்படையினர் ஹோவர் கிராப்ட் மூலம் குடும்பத்தினரை மண்டபத்திற்கு அழைத்து வந்து மண்டபம் மரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், பொருளாதார நெருக்கடி காரணமாக குடும்பம் தங்கள் நாட்டை விட்டு வெளியேறியதை இந்திய அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, மண்டபம் மறுவாழ்வு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதன் மூலம் ராமேஸ்வரம் வந்தடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 298 ஆக உயர்ந்துள்ளது.











Discussion about this post