ஐரோப்பாவில் குழந்தைகள் பிறக்கும் எண்ணிக்கை மிக அதிமான அளவில் குறைந்துள்ளது. பெருகி வரும் இந்திய மக்கள் தொகை மற்றும் அதனால் உண்டாகும் பிரச்னைகளோடு ஒப்பிடும்போது ஐரோப்பாவின் பிரச்னை முற்றிலும் மாறுபட்டது.
ஆனால், இந்தியாவிலும் கூட மகாராஷ்டிரா மற்றும் கோவா போன்ற மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் குறைந்துள்ளது. தமிழ்நாட்டிலும் கூட குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த மாநிலங்களை சேர்ந்த நகர்ப்புறங்களில் கடந்த சில தசாப்தங்களுடன் ஒப்பிடுகையில் குழந்தை பிறக்கும் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.
எனவே, ஐரோப்பாவில் என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டியது முக்கியமாகிறது. ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளும் குறிப்பிடத்தகுந்த அளவில் குழந்தை பிறப்பு விகிதத்தில் சரிவை கண்டுள்ளன.
பிரான்சில் கடந்த ஆண்டு 6,78,000 குழந்தைகள் பிறந்துள்ளன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்த நாட்டில் முதன்முறையாக ஒரே ஆண்டில் இவ்வளவு குறைவான குழந்தைகள் பிறந்துள்ளன.
பிரான்சில் மட்டுமின்றி இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளிலும் சில தசாப்தங்களாகவே குழந்தை பிறப்பு விகிதம் சரிவு பெரிய பிரச்னையாக உள்ளது.
பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதால், பல ஐரோப்பிய நாடுகளில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்தும், முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்தும் உள்ளது. இது அங்குள்ள அரசாங்கங்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
மக்கள் தொகை குறைவு என்பது உற்பத்தியை பாதிக்கும் விஷயமாகும். எனவே, இப்பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால், எதிர்காலத்தில் இந்நாடுகளின் பொருளாதாரம் சரிந்து அதலபாதாளத்திற்கு செல்லலாம்.
இதற்கு ஒரு தீர்வாக ஐரோப்பாவில் உள்ள சில நாடுகள் மக்கள் தொகையை அதிகரிக்க பில்லியன்கணக்கான யூரோக்களை முதலீடு செய்துள்ளன. ஆனால் அந்த முயற்சிகள் இன்னும் பலனைத் தரவில்லை.
இந்த கட்டுரையை மேலும் தொடர்வதற்கு முன்பு, இதில் பயன்படுத்தப்படும் சில சொற்களின் பொருளை தெரிந்துக் கொள்ளலாம்.
பிறப்பு விகிதம் என்பது 1,000 பேருக்கு எத்தனை குழந்தைகள் பிறக்கிறது என்ற எண்ணிக்கையாகும். உலக வங்கியின் கூற்றுப்படி, இந்தியாவின் பிறப்பு விகிதம் 16.1 ஆகும்.
கருவுறுதல் விகிதம் என்பது மொத்த மக்கள்தொகையில் உள்ள கர்ப்பம் தரிக்கும் வயதுடைய பெண்களின் எண்ணிக்கை மற்றும் உயிரோடு பிறக்கும் மொத்த குழந்தைகளின் எண்ணிக்கையின் சராசரி.
சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், ஒரு பெண்ணுக்கு எத்தனை குழந்தைகள் பிறக்கின்றன என்பதன் எண்ணிக்கை. அப்படி பார்க்கையில் ஒரு பெண்ணுக்கு 2க்கு மேல் கருவுறுதல் விகிதம் இருப்பது ஒரு நாட்டின் மக்கள்தொகைக்கு உகந்ததாக கருதப்படுகிறது.
2022ல் இந்தியாவின் கருவுறுதல் விகிதம் 2.0 ஆக இருந்தது. Lancet இன் சமீபத்திய அறிக்கையின்படி, இந்த விகிதம் தற்போது 1.9 ஆக குறைந்துள்ளது. இது வருகின்ற ஆண்டுகளில் மேலும் வீழ்ச்சியடையும் அபாயத்தையும் கொண்டுள்ளது.
ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் தற்போதைய சராசரி கருவுறுதல் விகிதம் 1.53 மட்டுமே.
கருவுறுதல் குறைய காரணம் என்ன?
அன்னா ரோத்கர் பின்லாந்தின் மக்கள்தொகை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சி இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பின்லாந்தின் மொத்த கருவுறுதல் விகிதம் அதிகமாக இருந்ததை சுட்டிக்காட்டுகிறார் அவர்.
“2011 இல் ஃபின்லாந்தின் கருவுறுதல் விகிதம் 1.9 ஆக இருந்தது. ஆனால் 2023 இல், கருவுறுதல் விகிதம் 1.3 என்ற விகிதத்திற்கும் கீழ் குறைந்து விட்டது. இது கிட்டத்தட்ட 32% வீழ்ச்சியாகும்.”
2010 ஆம் ஆண்டுக்கு பிறகு நோர்டிக் நாடுகளான பின்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளில் பிறப்பு விகிதம் குறையத் தொடங்கியதாக அன்னா ரோத்கர் கூறுகிறார்.
அதேசமயம் இந்த நாடுகளில் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான சிறந்த சுகாதார வசதிகள் மற்றும் குடும்ப நலத்திட்டங்களும் உள்ளன.
நார்டிக் நாடுகளின் சிறப்புகளாக கூறப்படும் இந்த வசதிகள் இருந்தபோதிலும், கருவுறுதல் விகிதம் வீழ்ச்சியடைந்து வருகிறது.
அதற்கான காரணங்கள் என்ன?
இதுகுறித்து அன்னா ரோத்கர் கூறுகையில், “வேலையின்மை மற்றும் பொருத்தமான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள சிரமங்களும் கர்ப்பம் தரிப்பதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன” என்று கூறுகிறார்.
அதுமட்டுமின்றி, சமூகம் மற்றும் கலாசாரத்தில் ஏற்படும் மாற்றங்களும் அதை பாதிக்கின்றன என்று குறிப்பிடுகிறார்.
பின்லாந்தில் இது குறித்து அரசு நிறுவனங்களால் சில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறும் அவர், அந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 15% பேர் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பவில்லை என்று கூறியுள்ளதை சுட்டிக்காட்டுகிறார்.
இதற்கு காரணமாக குழந்தை பெறுதல் தங்களது வாழ்க்கை தரத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர் அவர்கள்.
இந்த ஆய்வில் குழந்தை வளர்ப்பு குறித்து பல விதமான கருத்துகளை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். அதில் சில நேர்மறையானதாகவும், சில எதிர்மறையானதாகவும் உள்ளன.
“குழந்தைகளைப் பெற விரும்பாதவர்கள், பெற்றோராக மாறுவதால் குறைந்த தூக்கம், குறைந்த ஓய்வு மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்தில் சிரமம் ஏற்படும் உள்ளிட்ட காரணங்களை அடுக்குகின்றனர். அதே சமயம் குழந்தைகளைப் பெற விரும்புபவர்கள் இதன் நேர்மறையான அம்சங்களைப் பார்க்கிறார்கள்.”
“உண்மையில், நோர்டிக் நாடுகளில் உள்ள மக்கள் சிறந்த வருமானம் பெறுபவர்களாக உள்ளனர். அவர்களிடம் பணமும் நேரமும் இருக்கிறது. அதனால் அவர்கள் குழந்தைகளையும் குடும்பத்தையும் எளிதாகக் கவனித்துக் கொள்ள முடியும். ஆனால், இது குறித்து சரியான புரிதல் அவர்களுக்கு கிடைப்பதில்லை.”
ஒருவேளை இதனால் கூட ஐரோப்பிய நாடுகளில் பெண்கள் கருவுறும் விகிதம் குறைந்திருக்கலாம்.
பல பெண்கள் தங்களது வயது காரணத்தாலும் கருவுறுதலில் தாமதமும், சிக்கலையும் சந்திக்க நேரிடுகிறது.
ஆனால், இந்த போக்கு மாற வாய்ப்பு உள்ளதா?
2021 ஆம் ஆண்டில் கோவிட் தொற்று முடக்கத்தின் போது நோர்டிக் நாடுகளில் பிறப்பு விகிதம் ஓராண்டு காலத்திற்கு உயர்ந்திருந்ததாக அன்னா ரோத்கர் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் அந்த நிலை நீண்ட காலம் நீடிக்கவில்லை. 2022ல் மீண்டும் பிறப்பு விகிதம் சரிந்தது.
ஐரோப்பாவில் தொடர்ந்து குறைந்து வரும் கருவுறுதல் விகிதம்
மைக்கேல் ஹெர்மன் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தில் பொருளாதாரம் மற்றும் மக்கள்தொகை குறித்த மூத்த ஆலோசகராக உள்ளார். இந்த அமைப்பு உலக மக்கள் தொகையை கையாண்டு வருகிறது.
ஒருமுறை கருவுறுதல் விகிதம் மிகக் குறைந்துவிட்டால், அதை மீண்டும் உயர்த்துவது கடினம் என்று கூறுகிறார் மைக்கேல்.
“ஐரோப்பாவில் இத்தாலி, போர்ச்சுகல், கிரீஸ், செர்பியா மற்றும் தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கருவுறுதல் விகிதம் 1.3 ஆக குறைந்துள்ளது. இதை ஐரோப்பிய நாடுகள் மக்கள் தொகையில் புதிய மாற்றத்தை நோக்கி உலகை இழுத்து செல்கின்றன என்று கூட சொல்லலாம். மக்கள் தொகையில் இவ்வளவு பெரிய சரிவை நாம் இதற்கு முன் கண்டதில்லை.”
“தென் கொரியா உலகின் மிகக் குறைந்த கருவுறுதல் விகிதங்கள் கொண்ட நாடுகளில் ஒன்றாகும். அதே போல் ஈரான், மொரிஷியஸ் மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள சில ஏழை நாடுகளிலும் பல ஆண்டுகளாகவே, கருவுறுதல் விகிதம் குறைந்து வருகிறது.”
சில நாடுகளில், கருவுறுதல் விகிதங்கள் குறைவதற்கு குறிப்பிட்ட காரணங்களும் உள்ளது.
உதாரணத்திற்கு, சீன மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்காக ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை என்ற விதியை அந்நாடு 1979 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இது கருவுறுதல் விகிதத்தைக் குறைத்தது. இந்நிலையில் 9 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விதி ரத்து செய்யப்பட்டது.
கருவுறுதல் விகிதம் குறையும் போக்கை மாற்றி, அதை அதிகரிப்பது மிகவும் கடினம். சீனாவிலும் அதுதான் தற்போது நடந்துவருகிறது என்கிறார் மைக்கேல் ஹெர்மன்.
“வேலை மற்றும் வீட்டு வாழ்க்கையை சமநிலைப்படுத்துவதில் உள்ள சிரமங்களும் கருவுறுதல் விகிதங்கள் குறைவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.”
“குழந்தைகளை பராமரிக்க நிதி உதவி இல்லாத காரணத்தால், விதிகள் மாற்றப்பட்ட பிறகும் கூட சீனாவில் பல தம்பதிகள் இரண்டு அல்லது மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை.”
கணக்கெடுப்புகளின்படி, பல நாடுகளில் வாழும் மக்களுக்கு குழந்தைகள் இல்லாததற்கு வேறு பல காரணங்களும் உள்ளன.
அவற்றில் மோசமான சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் போன்ற காரணங்களால் சிலர் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை என்ற காரணமும் அடங்கும்.
வேறு சிலர் தங்கள் நாட்டின் அரசியல் சூழ்நிலையால் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை.
மறுபுறம், பொருளாதார மற்றும் சமூக நிலை மேம்பட்டிருந்தாலும் கூட சில நாடுகளில் கருவுறுதல் விகிதம் அதிகரிக்கவில்லை. அது ஏன் என்பதற்கான பதில் மிகவும் சிக்கலானது.
ஐரோப்பாவில் உள்ள பல நாடுகள் மற்றும் ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளில் கருவுறுதல் விகிதத்தை அதிகரிக்க பில்லியன் டாலர்கள் செலவிடப்படுகின்றன.
ஹங்கேரியின் தேசியவாத அரசாங்கம் குடியேற்றக் கொள்கைகளை விட இனப்பெருக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கைகளையே ஏற்றுக்கொண்டுள்ளது.
மக்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள ஊக்கமளிக்கும் வகையில், அரசு அவர்களுக்கு பெரும் வரிச் சலுகைகளை வழங்குகிறது.
மேலும், குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் திருமணமான தம்பதிகளுக்கு வீடு வாங்க அரசு நிதியுதவியும் வழங்கப்படுகிறது. ஆனால் ஒரே பாலின தம்பதிகளுக்கு அந்த வகையான உதவி கிடைப்பதில்லை.
தனது முயற்சிகளின் வழியாக “பிறப்பு விகிதத்தை உயர்த்துவதில் ஹங்கேரி நிச்சயமாக வெற்றி பெற்றுள்ளது” என்று கூறுகிறார் மைக்கேல். ஹங்கேரியின் மொத்த கருவுறுதல் விகிதம் 2010 முதல் 2022 வரை 25% அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.
ஐரோப்பிய நாடுகளில் ஒருபுறம் கருவுறுதல் விகிதம் வீழ்ச்சியை சந்திக்கும் நேரத்தில், மறுபுறம் ஆப்பிரிக்க கண்டம் ஒப்பீட்டளவில் அதிக கருவுறுதல் விகிதங்களைக் கொண்டுள்ளது. ஆனால் பல நாடுகளில் இதற்கு நேர்மாறாக உள்ளது.
“50 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவின் சராசரி கருவுறுதல் விகிதம் 6.5 ஆக இருந்தது என்கிறார் மைக்கேல். அதே விகிதம் தற்போது 4.1 ஆக குறைந்துள்ளது. அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு அது 2.1 ஆக குறைந்து விடும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எரித்திரியாவில் இன்னும் கருவுறுதல் விகிதம் 6.5 ஆக உள்ளது.”
ஐநா சபையின் கூற்றின்படி, உலகில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. அதன் முந்தைய தரவுகளின்படி, 2022 ஆண்டிற்குள் உலக மக்கள் தொகை எட்டு பில்லியனை எட்டும் என்று கூறப்பட்டது.
ஆனால் கருவுறுதல் விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதால், எதிர்காலத்தில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதமும் குறையும்.
தற்போது மக்களின் ஆயுட்காலம் அதிகரித்து வரும் நிலையில், பல நாடுகளிலும் முதியோர்களுக்கான ஓய்வூதியச் செலவை எப்படி ஈடுகட்டுவது என்ற பிரச்சனை அரசுகளை கவலைக் கொள்ள செய்துள்ளது.
பிறப்பு விகிதம் குறைந்து வருவதால், உற்பத்தியை நேரடியாக பாதிக்க கூடிய நாட்டின் முக்கிய துறைகளில் பணியாற்றும் இளைஞர்களின் பற்றாக்குறையும் அதிகரிக்கிறது.
இந்த நாடுகள் தங்கள் கருவுறுதல் விகிதத்தை உயர்த்தினாலும் கூட, தொழிலாளர் பற்றாக்குறையை நிரப்ப பத்தாண்டுகளுக்கு மேல் ஆகலாம்.குழந்தை பெற்றுக் கொண்டால் பணம், சலுகைகளை வாரி வழங்கும் நாடுகள்
இத்தாலியில் மிலன் நகரில் உள்ள போக்கோனி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் மையத்தில் மக்கள்தொகை(Demography) பேராசிரியராக பணியாற்றுபவர் எர்ன்ஸ்ட் அசேவ்.
எர்ன்ஸ்டனின் கூற்றுப்படி, “தொடக்கத்திலிருந்தே பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கான நல்ல திட்டங்களைக் கொண்டுள்ள நாடுகளில், பெண்களுக்கு சிறந்த வசதிகள் மற்றும் மகப்பேறு விடுப்பு அல்லது குழந்தை பராமரிப்புக்கான நிதியுதவி கிடைத்து வருகிறது. இங்கு கருவுறுதல் விகிதமும் அதிகமாக உள்ளது.”
“இந்த கொள்கைகள் உண்மையில் கருவுறுதல் விகிதத்தை அதிகரிப்பதற்காக வடிவமைக்கப்படவில்லை. மாறாக பெண்களுக்கு சம வாய்ப்புகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டன. ஆனால் இது கருவுறுதல் விகிதத்தை அதிகரிக்கவும் உதவியது.”
“இதன் அர்த்தம் என்னவெனில் நாம் கருவுறுதல் விகிதத்தை அதிகரிப்பதற்கான கொள்கைகளை வடிவமைக்க விரும்பினால், வேறு பல விஷயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.”
“ஏனென்றால் கருவுறுதல் விகிதத்தை அதிகரிக்க மட்டுமே எடுக்கப்படும் நடவடிக்கைகள் அவ்வளவு வெற்றியை தருவதில்லை.”
எர்ன்ஸ்ட் அசேவ் எழுப்பும் இதே சந்தேகம், பிரான்சிலும் காணப்படுகிறது.
கருவுறுதல் விகிதத்தை அதிகரிக்க மட்டுமே வடிவமைக்கப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில், மக்களை குழந்தை பெற்றுக்கொள்ள ஊக்குவிப்பதில் பிரான்ஸ் அரசு சிக்கலை எதிர்கொண்டு வருகிறது.
“குடும்ப நலக் கொள்கைகள் மிகவும் சிறப்பாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் பிரான்சும் சேர்க்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் பிரான்சின் கருவுறுதல் விகிதம் ஒப்பீட்டளவில் அதிகமாகவே உள்ளது.”
“ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பிரான்சின் கருவுறுதல் விகிதத்தில் ஏற்பட்டிருக்கும் சரிவு எதிர்காலத்தில் தொடரும் என்று சொல்வது கடினம்.”
“இதில் மற்றொரு உதாரணமாக, சில ஆண்டுகளுக்கு முன் கருவுறுதல் விகிதம் பெரும் கவலையாக இருந்த ஜெர்மனியைக் கூறலாம். நோர்டிக் நாடுகளை பின்பற்றி குடும்ப நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தி, குழந்தை வளர்ப்புக்கு நிதி உதவி வழங்கத் தொடங்கியது ஜெர்மனி.”
“இதன் காரணமாக ஜெர்மனியின் கருவுறுதல் விகிதம் அதிகரித்துள்ளதன் மூலம் அந்த திட்டமும் பெருமளவில் வெற்றிபெற்றுள்ளது.”
ஆனால் ஐரோப்பிய நாடுகள் பலவும், நீண்ட காலமாக கருவுறுதல் விகிதங்கள் உயரக் காத்திருக்கின்றன என்றும் எர்னஸ்டன் குறிப்பிடுகிறார்.
“கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக இத்தாலி மற்றும் ஸ்பெயினில் கருவுறுதல் விகிதம் குறைவாகவே உள்ளது. அங்கு விகிதத்தில் சரிவு இருக்கிறதோ அல்லது இல்லையோ, ஆனால் தொடர்ந்து கருவுறுதல் விகிதம் மட்டும் குறைவாகவே உள்ளது. மேலும் அந்நாடுகளின் அரசுகளுக்கு அது வெளிப்படையான கவலையை அளித்துள்ளது.”
சமீபத்தில் இத்தாலியின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, நாட்டில் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கு தனது அரசு முன்னுரிமை அளிக்கும் என்று கூறியுள்ளார்.
2022 ஆம் ஆண்டு கணக்கின்படி, இத்தாலியில் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட 70% இளைஞர்கள் தங்கள் பெற்றோருடன் வாழ்கிறார்கள். அதாவது அவர்களில் பெரும்பாலோர் நிதி ரீதியாக தன்னிறைவு பெற்றவர்கள் அல்ல. எனவே குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது அவர்களுக்கு கடினமாக இருக்கும்.
இந்த விஷயத்தில் இளைஞர்களுக்கு நிதியுதவி வழங்குவது பலனளிக்கும், அதேசமயம் அதற்கு இணையாக அரசின் கொள்கைகளில் நிலைத்தன்மையும் முக்கியமானது என்று நம்புகிறார் எர்ன்ஸ்டன். அதன் மூலம் குழந்தைகள் பிறந்த பிறகும் கூட உதவிகள் கிடைக்கும் என்று மக்கள் நம்புவார்கள்.
கருவுறுதல் விகிதம் எவ்வளவு குறையும்?
ஆஸ்திரிய அறிவியல் அகாடமியில் உள்ள மக்கள்தொகைக்கான வியன்னா மையத்தில் துணை இயக்குனராக இருந்து வருகிறார் தாமஸ் சோபோட்கா.
பிறப்பு விகிதம் குறித்து அவர் பேசுகையில், “பல நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துவிட்டதாகவும், இன்னும் அது எந்த அளவிற்கு குறைய வாய்ப்புள்ளது என்பதை தாங்கள் ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கிறார்.”
“கருவுறுதல் விகிதம் குறையும் போது, எதிர்காலத்தில் அதை உயர்த்துவது கடினமாக இருக்கும். பல நாடுகள் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
அதேசமயம் கருவுறுதல் குறித்த மக்களின் கருத்துக்கள் மற்றும் முடிவுகளில் கொள்கை வகுப்பாளர்களும் அரசுகளும் உண்மையில் எவ்வளவு செல்வாக்கு செலுத்துகிறார்கள் என்கிற பிரச்சினையும் உள்ளது.
ஆனால் அது மக்களின் குடும்ப விஷயங்களில் அரசு மூக்கை நுழைப்பது போல் ஆகிவிடாதா?
“ஏற்கனவே குடும்பங்களின் வளர்ச்சியில் பங்கு கொண்டிருக்கும் பொதுநல அரசுகளின் கீழ்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்,” என்கிறார் தாமஸ். ஆனால், கட்டாய கருவுறுதல் கொள்கைகள் நீண்ட காலத்திற்கு பலனளிக்கும் திட்டங்களாக இல்லை.
மக்கள் மற்றும் குறிப்பாக பெண்கள் எத்தனை குழந்தைகளைப் பெற வேண்டும் என்று மக்களின் மனதை மாற்றுவதற்குப் பதிலாக, நிலைமையை ஏற்றுக்கொண்டு, குறைந்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப நமது பொருளாதாரத்தை மாற்றியமைப்பது நல்லது அல்லவா?
இது ஒரு நாட்டின் கருவுறுதல் விகிதம் எவ்வளவு வேகமாக வீழ்ச்சியடைகிறது என்பதைப் பொறுத்தே அமைகிறது என்கிறார் தாமஸ் சோபோட்கா.
“நீண்ட காலமாக மக்கள்தொகை குறைந்த வேகத்தில் சரிந்து வரும் நாடுகளில், பொருளாதாரம் மற்றும் தொழிலாளர் சந்தை அதற்கேற்ப சரிசெய்து கொள்ள முடியும். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை ஒரு சதவீதம் குறைந்து வரும் பகுதிகளில், இந்தப் பிரச்சனையைச் சமாளிப்பது சவாலானதாக இருக்கும்.”
“ஏனெனில் தொழிலாளர் சந்தையில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டால், உள்கட்டமைப்பு மற்றும் இதர வசதிகள் பாதிக்கப்படும். தொலைத்தொடர்பு, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அரசு நிர்வாகத்தை செயல்படுத்துவதற்கு ஆட்கள் குறைவாகவே இருப்பார்கள். இதன் காரணமாக இந்த அமைப்புகள் சரியாக செயல்பட முடியாது.”
கனடா போன்ற சில நாடுகள் இதற்கு தீர்வு காணும் வகையில், பிற நாடுகளில் இருந்து குடியேறுபவர்களை தங்கள் நாட்டிற்கு வந்து வாழ அனுமதித்து வருகின்றன. ஆனால் இடம்பெயர்வு அல்லது குடியேற்றம் என்பது பல நாடுகளில் ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாகும்.
கருவுறுதல் விகிதங்கள் குறைந்து வருவதை ஏன் ஒரு வாய்ப்பாக பார்க்கக்கூடாது என்பதற்கு தாமஸ் சோபோட்கா விளக்கம் தருகிறார்.
அதாவது குழந்தைகள் குறைவாக பிறக்கும் நாடுகளில் அந்த குழந்தைகளுக்கு சிறந்த கல்வி மற்றும் சமூக வசதிகளை வழங்க முடியும். அது நாட்டின் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. அந்த சூழலில் குழந்தைகள் வளரும்போது, போட்டியும் குறைவாக இருக்கும். அவர்களுக்கு நல்ல வருமானமும் கிடைக்கும்.
மக்கள்தொகை குறைவதோடு, வீட்டு வசதிக்கும் தட்டுப்பாடு ஏற்படாது. இளைஞர்கள் சிறந்த வாழ்க்கையை நடத்த முடியும்.
இருப்பினும் குறைந்து வரும் கருவுறுதல் விகிதத்தை ஐரோப்பாவால் மீண்டும் அதிகரிக்க முடியுமா?
நோர்டிக் நாடுகளில், குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதற்கு மக்களுக்கு நிதி உதவி வழங்கும் கொள்கை தற்போது மிகவும் வெற்றிகரமானதாக இல்லை. இதுவே அரசின் சமூகக் கொள்கைகளில் ஸ்திரத்தன்மையும், நிலைத்தன்மையும் இருந்தால் இந்த திட்டங்கள் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.
தற்போதைய சூழலில் இந்த நாடுகள் முன்பை விட அதிக கருவுறுதல் விகிதத்தை அடைவது கடினம். அதே சமயம் தற்போது இருக்கும் கருவுறுதல் விகிதத்தையாவது சரியாமல் பார்த்துக் கொள்வதுதான் இவர்களுக்கு இருக்கும் ஒரே வழி.
Discussion about this post