20 பழைய கம்ப்யூட்டர் மதர்போர்டுகளில் இருந்து 450 மில்லிகிராம் தங்கத்தை எடுத்துள்ளனர். கிடைக்கப்பெற்ற தங்கத்தில் 22 காரட்டுக்கு ஒத்த அளவில், 91% தங்கம் மற்றும் மீத அளவு செம்பு இருந்துள்ளது.
எலெக்ட்ரானிக் கழிவுகள் (E-waste) வளர்ந்து வரும் ஆபத்தாக மாறியுள்ளது. ஆனால், இதிலிருந்து தங்கத்தை எடுத்து லாபம் ஈட்டும் வழியை ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த இடிஹெச் சூரிச்சின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஏற்கெனவே எலெக்ட்ரானிக் கழிவுகளிலிருந்து தங்கத்தை பிரித்தெடுப்பதற்கான முறைகள் இருந்தாலும் இந்தப் புதிய முறையில் ஒரு அமெரிக்க டாலர் செலவு செய்தால், 50 அமெரிக்க டாலர் மதிப்புள்ள தங்கம் கிடைக்கும் என்று கூறியுள்ளனர். எலெக்ட்ரானிக் கழிவுகளிலிருந்து தங்கத்தைப் பிரிக்க புரோட்டின் ஸ்பான்ஜ், சீஸ் தயாரிக்கும்போது கிடைக்கும் துணைப் பொருள்களைப் பயன்படுத்துகின்றனர்.
கழிவில் இருந்து தங்கம், எப்படி சாத்தியமானது..?!
ஆய்வில், 20 பழைய கம்ப்யூட்டர் மதர்போர்டுகளிலிருந்து உலோக பாகங்களை அகற்றி, அமிலத்தில் கரைத்து, அதன்பின் தங்க அயினிகளை ஈர்க்க ஒரு புரத ஃபைபர் ஸ்பான்ஜை கரைசலில் வைத்தார்கள். தங்க இழைகள் உடனே அதில் வந்து ஒட்டிக் கொள்கின்றன. மற்ற உலோகங்களும் இதில் ஒட்டிக் கொண்டாலும், தங்கம் அதிக அளவில் சேர்கிறது.
வெறும் 20 பழைய கம்ப்யூட்டர் மதர்போர்டுகளில் இருந்து 450 மில்லிகிராம் தங்கத்தை எடுத்துள்ளனர். கிடைக்கப்பெற்ற தங்கத்தில் 22 காரட்டுக்கு ஒத்த அளவில், 91% தங்கம் மற்றும் மீத அளவு செம்பு இருந்துள்ளது. இந்த முழு செயல்முறைக்கான மூலப்பொருள்களின் செலவுகள், ஆற்றல் செலவுகளை ஒப்பிடுகையில் தங்கத்தின் மதிப்பு 50 மடங்கு அதிகமாக இருந்துள்ளது.
இது குறித்து ஆய்வில் பங்கேற்ற பேராசிரியர் ரஃபேல் மெசெங்கா கூறுகையில், `இதில் உண்மை என்னவென்றால், எலெக்ட்ரானிக் கழிவுகளிலிருந்து தங்கத்தைப் பெற நாங்கள் உணவுத் துறையின் துணைப் பொருளைப் பயன்படுத்துகிறோம். அதைவிட நிலையான பொருளை நீங்கள் பெற முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.
Discussion about this post