எகிப்தின் ஷார்ம் எல் ஷேக் நகரில் நடைபெறும் காலநிலை மாற்றம் தொடர்பான COP 27 மாநாட்டில் பங்கேற்கச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (10) முற்பகல் நாடு திரும்பியுள்ளார்.
COP 27 காலநிலை மாற்ற தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்றதைத் தொடர்ந்து அவர் இன்றையதினம் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
குறித்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட், காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, ஜனாதிபதியின் சர்வதேச விவகாரப் பணிப்பாளர் தினுக் கொலம்பகே மற்றும் ஜனாதிபதியின் பிரத்தியேகச் செயலாளர் சென்ட்ரா பெரேரா ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) எகிப்து சென்றிருந்தனர்.
நவம்பர் 06 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை இடம்பெறும் இம்மாநாட்டில் நவம்பர் 07 மற்றும் நவம்பர் 08ஆம் திகதிகளில் இடம்பெறும் அரச தலைவர்கள் மாநாடு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள காலநிலை மாற்றம் தொடர்பில் உரையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குறித்த மாநாடு நடைபெற்ற காலப்பகுதியில் ஐ.நா. செயலாளர் நாயகம், சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பிரதானி, உலக வங்கி குழும தலைவர், பிரிட்டன் பிரதமர், ஸ்லோவேனிய ஜனாதிபதி, கொரியா உள்ளிட்ட நாடுகளின் பிரநிதிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
