மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் 40 வீதமானோர் பட்டினியை எதிர்கொள்வதாக, மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் பணிப்பாளரும், உலக தொழிலாளர் சம்மேளனத்தின் செயலாளருமான கலாநிதி சிவப்பிரகாசம் தெரிவித்துள்ளார்.
கொட்டகலையில் இடம்பெற்ற போசாக்கு மட்டத்தை விருத்தி செய்வதற்கான கருத்து பரிமாற்ற தெளிவூட்டல் நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், எஞ்சிய 60 வீதமானோர் ஒருவேளை அல்லது இருவேளை உணவையே எடுத்துக்கொள்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கர்ப்பிணி தாய்மார், பாலூட்டும் தாய்மார் மற்றும் சிறார்களின் உணவு உட்கொள்ளல் நிலைமை மோசமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
மலையக பிரதேசத்தில் போசாக்கு மட்டமானது மிகவும் குறைவாக காணப்படுகின்ற நிலையில், 6 பிரதேசங்களில் மனித அபிவிருத்தி தாபனம் போசாக்கு திட்டத்தை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மனித அபிவிருத்தி தாபனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பி.பி.சிவப்பிரகாசம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் விதுர சம்பத் கலந்து கொண்டதோடு, பிரதேச கிராம சேவகர்கள், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகள், பிரதேச அபிவிருத்தி அதிகாரிகள், சிறுவர் பராமரிப்பு அபிவிருத்தி அதிகாரிகள், சமூக சேவையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Discussion about this post