‘செய்கடமை’ ‘கொவிட் 19 – சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தை முடிவுக்குக் கொண்டுவர அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய ‘கொவிட் 19- சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின்’ பேரில் இலங்கை வங்கியில் பேணப்பட்டு வந்த 85737373 என்ற உத்தியோகபூர்வ கணக்கு 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதியின் பின்னர் செயற்படாது என சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் செயலாளர் கலாநிதி.தாரக்க லியனபத்திரன தெரிவித்தார்.
எனவே அதில் பணம் வைப்பிலிட வேண்டாம் என்றும் இந்தக் கணக்கில் வைப்பிலிடுவதற்காக இனிமேலும் பணமோ, காசோலையோ அனுப்ப வேண்டாம் என்றும் நன்கொடையாளர்களிடம் கோரப்பட்டுள்ளது.
கொவிட் 19 பெருந்தொற்றின்போது, நாட்டில் முன்னெடுக்கப்பட்ட சுகாதார பாதுகாப்புப் பணிகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக நன்கொடையாளர்கள் அளித்த ஒத்துழைப்பிற்கு சுகாதார சமூக பாதுகாப்பு நிதியத்தின் செயலாளர் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
கொவிட் நிதிக்காக நன்கொடையாளர்களிடமிருந்து இருநூற்று இருபது கோடியே எழுபத்து ஒரு லட்சத்து அறுபத்து நான்காயிரத்து எழுநூற்று எண்பத்து ஐந்து ரூபா, ஐம்பத்தி எட்டு சதம் (ரூ. 2,207,164,785.58) கிடைக்கப்பெற்றுள்ளது.
பீ.சீஆர் பரிசோதனைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள், தேசிய தடுப்பூசி திட்டம், அவசர சிகிச்சை பிரிவுக்கு படுக்கைகள் கொள்வனவு மற்றும் மருந்து கொள்வனவு ஆகியவற்றுக்கான வசதிகளை வழங்க நூற்று தொண்ணூற்று ஒன்பது கோடியே எழுபத்தைந்து இலட்சத்து அறுபத்தொன்பதாயிரத்து நானூற்று ஐம்பத்தி ஆறு ரூபா ஐம்பத்தாறு சதம் (ரூ. 1,997,569,456.56) இந்த நிதியத்தில் இருந்து செலவிடப்பட்டுள்ளது.
2022 ஒக்டோபர் 18ஆம் திகதி கணக்கு மிகுதியின் பிரகாரம் கொவிட் நிதியில் இருபத்தி ஒரு கோடியே அறுபத்து எட்டு லட்சத்து எழுபத்தி ஏழாயிரத்து நானூற்று முப்பத்தொரு ரூபா (ரூ. 216,877,431.05) எஞ்சியுள்ளது. இதனை ஜனாதிபதி நிதியில் வைப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மக்களுக்கு அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக அந்த நிதி பயன்படுத்தப்படும்.
Discussion about this post