💥 அச்சடித்த வாக்குச்சீட்டுகளை வழங்க அரச அச்சகம் மறுப்பு.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அச்சிடப்பட்ட தபால் மூல வாக்குச்சீட்டுகள் கிடைக்காத காரணத்தினால் இம்மாத இறுதியில் தபால்மூல வாக்களிப்பை திட்டமிட்டபடி நடத்த முடியாதென தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை அரச அச்சகத்திலிருந்து தபால்மூல வாக்குச்சீட்டு களை தேர்தல் ஆணைக்குழு பெறவில்லை.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தபால்மூல வாக்குச்சீட்டு களை வழங்க தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டிருந்தது.
இதற்கிடையில், தற்போது அச்சிடப்பட்டுள்ள தபால்மூல வாக்குச்சீட்டுகளை பணம் செலுத்தும்வரை ஒப்படைக்க முடியாதென அரசாங்க அச்சகர் திருமதி கங்கானி கல்பனா லியனகே வெள்ளிக்கிழமை (17) தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
தற்போது அச்சிடப்பட்டுள்ள வாக்குச்சீட்டுகளை ஒப்படைக்கு மாறு தேர்தல் ஆணைக்குழு தன்னிடம் கோரிக்கை விடுத்ததாக அவர் தெரிவித்தார்.
பதினேழு மாவட்டங்கள் தொடர்பான வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டு பாதுகாப்புக் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டுள்ளபோதிலும், அவை இதுவரை பொலிஸாரின் பாதுகாப்பில் பொதியிடப்பட்டு சரிபார்க்கப்படவில்லை எனவும் அரச அச்சகர் கூறினார்.
வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கு அரசாங்க அச்சகம் தற்போது செலவிட்ட தொகை சுமார் 20 கோடி ரூபாவாகும். ஆனால், அந்த அச்சடிக்கும் பணிக்காக நான்கு கோடி ரூபாவே கிடைத்துள்ளதாக திருமதி கங்கானி கல்பனா லியனகே மேலும் தெரிவித்தார்.
எக்காரணம் கொண்டும் தேர்தல் இரத்துச்செய்யப்பட்டால் உள்ளூராட்சித் தேர்தலுக்காக அச்சடிக்கப்பட்ட அனைத்து வாக்குச்சீட்டுகளையும் அகற்ற நேரிடும் என அரச அச்சகம் கூறுகிறது.
ஆனால், அறிவுறுத்தல் துண்டுப்பிரசுரங்கள் மற்றும் படிவங்களை மட்டுமே மற்ற தேர்தல்களுக்கு பயன்படுத்த முடியும் என்று அரச அச்சகர் சுட்டிக்காட்டுகிறார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தல் தொடர்பான ஏனைய வாக்குச் சீட்டுகளை அச்சடிக்கும் பணியை பணம் வழங்கும் வரை ஆரம்பிக்க முடியாது என அரசாங்க அச்சகர் ஏற்கனவே தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




Discussion about this post