போதையில் வாகனம் செலுத்திய மூன்று தனியார் பஸ் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெல்லம்பிட்டிபொலிஸார் தெரிவிக்கின்றனர்.ஹங்வெல்ல – புறக்கோட்டை, கடுவலை – கோட்டை மற்றும் கொஹிலவத்த – நகர மண்டபம் ஆகிய பகுதிகளுக்கு இடையில் சேவையில் ஈடுபட்டிருந்த பஸ்களின் சாரதிகள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல சாரதிகள் போதைப்பொருள் பாவனையில் பஸ்களை ஓட்டிச் செல்வதாக வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய, திடீர் சோதனை நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டது.இந்த சந்தேக நபர்களை கைது செய்யும்போது, அவர்கள் செலுத்திய பஸ்களில் அதிகளவானோர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சட்ட வைத்திய அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட்ட சந்தேகநபர்களின் இரத்த மாதிரிகள் மூலம், அவர் போதைப்பொருள் பாவித்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த சாரதிகளுக்கு பஸ்களை வழங்கிய, அவற்றின் உரிமையாளர்களும் பொலிஸ்நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டதாகவும், சாரதிகளுக்கு பஸ்களை வழங்கும்போது அவர்களின் பின்னணி குறித்த நன்கு ஆராய வேண்டும் என்றும் பயணிகளின் உயிரைப் பாதுகாக்கும் பாரிய பொறுப்பு உரிமையாளர்களுக்கும் இருப்பதாக எச்சரிக்கப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட சாரதிகள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
Discussion about this post