இரத்தினபுரி கஹவத்தை தோட்டத்தில் வீடு உடைக்கப்பட்ட சம்பவத்தை வைத்து, நாம் அரசியல் செய்ய முற்படவில்லை என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். அதேவேளை, மக்களுக்கு எங்கெல்லாம் அநீதி இடம்பெறுகின்றதோ அவர்களுக்காக குரல் கொடுப்பதற்கு எப்போதும் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேற்படி விவகாரம் தொடர்பில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரனவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதுடன், அதற்கிணங்க பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு வீடொன்றை பெற்றுக் கொடுப்பதற்கும் உரிய நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் மேற்படி குடும்பத்திலுள்ள ஒருவருக்கு கஹவத்தை தோட்டத்தில் உத்தியோகத்தர் நியமனம் ஒன்றை பெற்றுக் கொடுக்கவும் அந்த வீட்டின் மாணவிக்கு பல்கலைக்கழக கல்விக்காக புலமைப் பரிசில் பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் அமைச்சரினால் தோட்ட முகாமைத்துவத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டுக்கான வரவு – செலவு திட்டத்தில் இரத்தினபுரி மாவட்டத்தில் அதிகளவான வீடுகளை அமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்திற்கு அமைச்சர் பணிப்புரை வழங்கியுள்ளார்.
அத்துடன் மேற்படி தோட்டத்தில் மாதிரிக் கிராமமொன்றை அமைப்பது தொடர்பிலும் அமைச்சர் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். இரத்தினபுரி கஹவத்தை தோட்டத்தில் தோட்ட முகாமைத்துவ தாக்குதல் காரணமாக அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த வீடொன்று அடித்து உடைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தமது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிலைமையை அவதானித்ததுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.






Discussion about this post