அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களினால் பொருளாதாரம் படிப்படியாக ஸ்திரத்தன்மை அடைந்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட சவாலான தீர்மானங்களால் இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையை நோக்கிச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பணவீக்கம் குறைந்திருப்பது பொருளாதாரம் சரியான திசையில் சென்றுகொண்டிருப்பதற்கான அறிகுறியாகும்.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் வருடாந்த மாற்றத்தால் அளவிடப்படும் பிரதான பணவீக்கம், நவம்பரில் 61.0 சதவீதமாக இருந்த டிசம்பரில் 57.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இதேபோன்ற போக்கைத் தொடர்ந்து, உணவுப் பணவீக்கம் நவம்பரில் 73.7 சதவீதத்திலிருந்து டிசம்பரில் 64.4 சதவீதமாகக் குறைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதேசமயம், நவம்பரில் 54.5 சதவீதமாக இருந்த உணவு அல்லாத பணவீக்கம் டிசம்பரில் 53.4 சதவீதமாக குறைந்துள்ளது.
அடுத்த சில மாதங்களில் பணவீக்கம் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பிணை எடுப்புப் பொதியைப் பெறுவதற்கு அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.
அரசாங்கம் ஏற்கனவே IMF உடன் பணியாளர் அளவிலான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது, இப்போது இருதரப்பு கடன் வழங்குபவர்கள் நிதி உத்தரவாதத்தை வழங்குவதற்காக காத்திருக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





Discussion about this post